கடத்தல் நாடகம் ஆடிய பவர் ஸ்டாரின் உண்மை முகம் அம்பலமானது..!

கடத்தல் நாடகம் ஆடிய பவர் ஸ்டாரின் உண்மை முகம் அம்பலமானது..!
கடத்தல் நாடகம் ஆடிய பவர் ஸ்டாரின் உண்மை முகம் அம்பலமானது..!
Published on

மனைவியை தொழிலதிபர் கடத்தி வைத்திருப்பதாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் நாடகமாடியிருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை அண்ணாநகரில் வசித்து வருபவர் பவர் ஸ்டார் சீனிவாசன். 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்ற படத்தின் மூலம் சினிமாவுலகில் காமெடி நடிகராக அறிமுகமாகி பிரபலமானார். கடந்த 5-ம் தேதியன்று பவர் ஸ்டாரை காணவில்லை என அவரது மனைவி ஜூலி அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதுகுறித்து போலீசார் சீனிவாசனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது அவர் ஊட்டியில் இருப்பதாக தெரிவித்தார். இதனால் போலீசார் நிம்மதியடைந்தனர்.

இதனையடுத்து சீனிவாசனின் மகள் தனது தாய், தந்தையின் உயிருக்கு ஆபத்து என்று போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் கடந்த 9-ம் தேதியன்று ஊட்டியில் இருந்து திரும்பிய பவர் ஸ்டார் சீனிவாசன், அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் 'பெங்களூருவைச் சேர்ந்த ஆலம் என்ற தொழிலதிபரிடம் நான் 90 லட்சம் கடன் வாங்கியிருந்தேன். அந்த பணத்தை திரும்ப கேட்டு அவர் என்னை சென்னை கோயம்பேட்டில் இருந்து காரில் அடியாட்களுடன் கடத்திச் சென்றார். பின்னர் என்னை ஊட்டியில் அடைத்து வைத்து அடித்து சித்ரவதை செய்தனர். இதனால் பயந்து போன நான் என் மனைவி பெயரில் ஊட்டியில் உள்ள ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை எழுதி தருவதாக கூறினேன். அதன் பேரில் என் மனைவியை மிரட்டி ஊட்டிக்கு வரவழைத்து அறையில் அடைத்து வைத்தனர். நான் என் பிள்ளைகளை பார்க்க வேண்டும் என்று அங்கிருந்து தப்பி வந்து விட்டேன். தொழிலதிபர் ஆலம்மிடம் இருந்து என் மனைவியை மீட்டுத்தாருங்கள்'' என அந்தப்புகாரில் கூறியிருந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் பவர் ஸ்டார் அளித்த புகாரின் பேரில் தொழிலதிபர் ஆலம், செல்வின், சினிமா பிஆர்ஓ பிரீத்தி மற்றும் சில அடையாளம் தெரியாத நபர்கள் மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்தனர். ஊட்டிக்கு சென்ற தனிப்படை போலீசார் ஆலம், செல்வின் உள்பட 7 பேரை சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தியதில் சீனிவாசன் ஆடியது கடத்தல் நாடகம் என தெரியவந்தது.

தனது நிலத்தை எனக்கு எழுதி தருவதாக சீனிவாசன் அழைத்ததன் பேரில்தான் நான் ஊட்டிக்கு வந்தேன். நான் அவரைக் கடத்தவில்லை என்று தொழிலதிபர் ஆலம் தெரிவித்தார். சீனிவாசன் தானாகவே ஊட்டிக்கு புறப்பட்டுச்சென்று தொழிலதிபர் ஆலமிடம் பண விவகாரம் தொடர்பாக தனது நிலத்தை எழுதி தருவதாக கூறியுள்ளார். அவரை யாரும் கடத்தவில்லை என்பது போலீசாரின் புலனாய்வில் வெளிவந்தது. இறுதியில் பவர் ஸ்டார் சீனிவாசனும் இதனை ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து போலீசார் கைது செய்த 7 பேரையும் விடுவித்தனர். பொய் புகார் அளித்து போலீசாரை அலைக்கழித்த சீனிவாசன் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com