வடசென்னை அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருவதால் மின் உற்பத்தி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வட சென்னை அனல் மின் நிலையத்தில் நிலக்கரியை எரியூட்டி மொத்தம் 1830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வரப்படுகிறது. இந்த அனல் மின் நிலையத்தில் 1000க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை இவர்கள் நடத்தி வந்த நிலையில் கடந்த மே மாதம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நிலையிலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
கோரிக்கைகளை பலமுறை எடுத்து செல்லியும் அதனை நிறைவேற்ற நடவடிக்கை இல்லை எனக் கூறியும், தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று காலை முதல் 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, அடையாள அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுவதால், அனல் மின் நிலையத்தில் செய்யப்படும் மின் உற்பத்தி முழுமையாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக மின்வாரியம் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் எனவும் எச்சரித்தனர். ஏற்கனவே சென்னையில் பல்வேறு இடங்களில் மின்வெட்டு இருக்கும் நிலையில் அன்ல் மின்நிலைய பணிகள் பாதிக்கப்பட்டால் மின்வெட்டு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது