தேரோடும் வீதிகளில் உள்ள மின் வழித்தடங்கள் புதைவிட மின் தடங்களாக ஆக மாற்றப்படும் என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேரவையில் தெரிவித்தார்.
கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் கிணத்துக்கடவில் உள்ள திருக்கோவில் தேரோடும் வீதியில் மின் வழித்தடத்தை புதைவிட பாதையாக மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "தேரோட்டம் நடைபெறும் திருக்கோவில் தேர் வீதிகளில் மின் வழித்தடங்கள் புதைவிடம் வாயிலாக கொண்டு செல்லப்படும். இந்த ஆண்டு திருவாரூர் உள்ளிட்ட மூன்று திருக்கோவில் தேரோடும் வீதிகளில் மின் வழித்தடம் புதை விடமாக மாற்ற நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெறுகிறது, வரும் காலங்களில் கோவில் தேர் வீதிகளில் உள்ள மின் இணைப்புகள் புதை விடங்களாக மாற்றப்படும்" என்று தெரிவித்தார்.
நேற்று தஞ்சை அருகே உள்ள களிமேடு கிராமத்தில் நடந்த தேர் திருவிழாவின் போது தேர் மின்கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.