18 மாத மின்கட்டண பாக்கி: அப்துல் கலாம் பயின்ற பள்ளியில் மின்இணைப்பு துண்டிப்பு

18 மாத மின்கட்டண பாக்கி: அப்துல் கலாம் பயின்ற பள்ளியில் மின்இணைப்பு துண்டிப்பு

18 மாத மின்கட்டண பாக்கி: அப்துல் கலாம் பயின்ற பள்ளியில் மின்இணைப்பு துண்டிப்பு
Published on

18 மாதங்களாக மின் கட்டண பாக்கி வைத்திருந்த காரணத்தினால் அப்துல் கலாம் படித்த பள்ளியில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

நாடே போற்றும் தலைவர்களில் ஒருவர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். அரசுப் பள்ளியில் பயின்று நாட்டின் குடியரசுத் தலைவர் என்ற மிகப்பெரிய பொறுப்பை வகித்தவர். எப்போதும் குழந்தைகள் மீது பேரன்பு கொண்டவர். இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் அவர். அப்துல்கலாமின் வார்த்தைகளை பின்பற்றும் ஏராளமான இளைஞர்கள் உண்டு. இந்நிலையில் மின் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் அப்துல் கலாம் படித்த பள்ளியில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்தான் அப்துல்கலாம் பயின்றார். இப்பள்ளியின் கடந்த 18 மாத கால மின்சார கட்டணம் 10 ஆயிரத்து 800 ரூபாய் செலுத்தப்படாமல் இருந்துள்ளது. இதனையடுத்து மின்வாரியத்தின் சார்பில், பலமுறை கட்டணத்தை செலுத்துமாறு பள்ளி தலைமையாசிரியரிடம் மின்வாரிய ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர். இப்பள்ளிக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில்தான் மின்கட்டணம் செலுத்தப்படுவது வழக்கம். ஆனால் அங்கிருந்து நிதி வராததால் தலைமையாசிரியர் மின் கட்டணத்தை செலுத்தாமல் நாட்களை தள்ளிபோட்டு வந்துள்ளார். இதனால் மின்வாரியம் பள்ளிக்கு வழங்கி வந்த மின்இணைப்பை துண்டித்துள்ளது. இதனையடுத்து தலைமையாசிரியர் இரண்டு நாட்களில் மின்கட்டணத்தை செலுத்திவிடுவோம் என கேட்டுக்கொண்டதையடுத்து ஒரு வார கால அவகாசம் வழங்கி தற்போது மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com