தங்க நகை வியாபாரி சாலையில் தவறவிட்ட பணத்தை சைக்கிள் ஸ்டேண்ட் ஊழியர் மீட்டு போலீசார் மூலம் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
ஈரோடு விவிசிஆர் நகரைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவர் திண்டல் முருகன் கோயிலில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டில் வாகனங்களுக்கு டோக்கன் போடும் பணி செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனது நண்பர்களுடன் கடைவீதிக்கு வந்த இவர், பொன் வீதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது கேட்பாரற்று சாலையில் ரூ. 50 ஆயிரம் பணம் கிடந்துள்ளது.
இதையடுத்து அந்த பணத்தை எடுத்த நந்தகுமார் அங்கிருந்த கடைக்காரர்களிடம் சொல்லிவிட்டு நகர காவல் நிலையத்தில் காத்திருந்தார். இந்நிலையில், அதே பகுதியில் நகை வியாபாரம் செய்து வரும் சோமசுந்தரம் என்பவர் கொண்டு வந்த இரண்டு லட்சம் ரூபாயில் 50 ஆயிரத்தை தவறவிட்டது தெரியவந்தது.
விசாரணைக்கு பிறகு டிஎஸ்பி ஆனந்தகுமார், நந்தகுமார் கொண்டு வந்த பணத்தை தங்க நகை வியாபாரி சோமசுந்தரத்திடம் ஒப்படைத்தார். ஏழ்மையிலும் கீழே கிடந்த பணத்தை நேர்மையுடன் உரியவரிடம் ஒப்படைத்த இளைஞரை போலீசார் மட்டுமின்றி பொதுமக்களும் பாராட்டினர்.