பொம்மேபள்ளி கிராமத்தில் கோழிப் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3500 கோழிக் குஞ்சுகள் கருகி உயிரிழந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த பொம்மேபள்ளி கிராமத்தில் சாந்தா என்பவர் தனது வீட்டின் அருகே 4000 கோழிகளை வளர்க்கக்கூடிய இரு பண்ணைகளை அமைத்து அதில் கோழிகளை வளர்த்து வருகிறார். ஒரு பண்ணையில் சுமார் 3500 வளர்ந்த நிலையில் உள்ள கோழிகள் இருந்துவரும் நிலையில், ஒரு பண்ணையில் புதியதாக 3500 கோழி குஞ்சுகளை நேற்று முன் தினம் இறங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு கோழப்பண்ணை திடீரென தீப்பிடித்து எரியத்துவங்கியுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சாந்தா மற்றும் அவரது மகன் திருப்பதி ஆகியோர் தீயை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால், அவர்களால் முடியாத நிலையில், பர்கூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அதற்குள்ளாக பண்ணையில் இருந்த 3500 கோழி குஞ்சுகள் உட்பட பண்ணை முழுவதும் தீக்கிறையானது. சுமார் 3 லட்சம் மதிப்பிலான பண்ணை மற்றும் கோழி குஞ்சுகள் எரிந்து சாம்பலானது. இச்சம்பவம் குறித்து மத்தூர் போலீசார் விசாரனை மேற்கொண்டதில் மின் கசிவு காரணமாக தீ பற்றியிருக்கலாம் என முதற்கட்ட விசாரனையில் தெரியவருகிறது.