காரைக்காலில் உள்ள பிரபலமான தங்கும் விடுதியில் ஓருவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு அதன் நிர்வாகம் சார்பில் தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கழிவறையில் யாரும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
காரைக்கால் மாவட்டம் காமராஜர் சாலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக கன்னியாகுமரியில் இருந்து வந்த சுற்றுலாப்பயணி தங்கியுள்ளார். அப்போதே அறையிலுள்ள கழிவறை கதவு சரியாக இயங்காதது குறித்து விடுதி மேலாளரிடம் புகார் கூறியபோது, அடுத்த அறையின் கழிவறையை உபயோகப்படுத்திக்கொள்ள விடுதி நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.
அந்த பயணி அறையை காலி செய்து சென்றதுகூட நிர்வாகத்திற்கு தெரியவில்லை. அத்துடன், அறையில் உள்ள கழிவறை கதவு தானாக பூட்டிக்கொண்ட காரணத்தால் திறக்க முடியாத நிலையில் கழிவறையிலிருந்து துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. இந்த நிலையில், அறையை காலி செய்தபோது விடுதி ரெஜிஸ்டரில் பதிவில் குறிப்பிடாததால், அந்த அறையில் தங்கியிருந்த பயணி கழிவறையில் இறந்து கிடப்பதாகவும், 3 நாட்களுக்கு மேல் ஆனதால் உடல் அழுகி துர்நாற்றம் வீசுவதாகவும் நகர காவல் நிலையத்திற்கு விடுதி நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
வெளியூர் பயணி விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டு உடல் அழுகி துர்நாற்றம் வருவதாக ஊகித்த விடுதி நிர்வாகம் அளித்த தகவலை நம்பிய போலீசாரும், உடலை ஏற்றிச்செல்ல ஆம்புலன்ஸ் மற்றும் கூடுதல் போலீசாருடன் விடுதியில் குவிந்தனர். கழிவறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
கழிவறையில் யாரும் இல்லாத நிலையில் சரியாக சுத்தம் செய்யாத காரணத்தால் துர்நாற்றம் வீசியது தெரிய வந்தது. போலீசார் விசாரணையில் அந்த அறையில் தங்கியிருந்த பயணி அறையை காலிசெய்து சென்று 3 நாட்களாகியும் அதை விடுதி ரெஜிஸ்டரில் பதியாத விடுதி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துச்சென்றனர்.