தமிழகத்தில் முதலாவதாக 100% கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி பூவிருந்தவல்லி, திருவேற்காடு நகராட்சிகள் சாதனை செய்துள்ளது
தமிழகத்தில் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பூவிருந்தவல்லி நகராட்சியில் ஆணையர் ரவிசந்திரன் தலைமையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வந்தது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி முகாம்கள், வீடு தேடி தடுப்பூசி என பல வழிகளில் பொதுமக்களுக்கு பூவிருந்தவல்லி நகராட்சியினர் தடுப்பூசி செலுத்தினர்.
மக்களை கவரும் வகையில் தடுப்பூசி போடுபவர்களுக்கு குலுக்கல் முறையில் அனைவருக்கும் பரிசு என பல திட்டங்களை அறிவித்தனர். இதன் விளைவாக தமிழகத்தில் முதல் நகராட்சியாக 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் தடுப்பூசி செலுத்தி சாதனை செய்துள்ளது. முதல் தவணையான 49,042 பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நிலையில் இரண்டாவது தவணையும் போடப்பட்டு வருகிறது.
இதேபோல் ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு நகராட்சியில் 100% தடுப்பு ஊசி செலுத்தி சாதனை செய்துள்ளனர் இங்கு மொத்த மக்கள் தொகையான 67654 பொதுமக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். திருவேற்காடு நகராட்சியில் தொடர்ந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் விளைவாக 100% இலக்கை அடைந்ததாக நகராட்சி ஆணையர் வசந்தி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.