ஊரடங்கில் குடிசை வீட்டை தனது ஓவியத்தால் அலங்கரித்த ஏழை மாணவனை ஊர்மக்கள் பாராட்டி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த குருமணாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கணேசன்- மாரியம்மாள் தம்பதி. விவசாய கூலி வேலை செய்து வரும் இவர்களில் கணேசன் மாற்றுத்திறனாளி. இவர்களின் மகன் மாரிமுத்து வைத்தியநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறான். அன்றாடம் வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தி வந்த இவர்கள் தற்போது பொதுமுடக்கத்தால் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
பள்ளியும் விடுமுறை விடப்பட்டதால் மாரிமுத்துவுக்கு என்னசெய்வதென்று தெரியவில்லை. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் தனக்குள் இருந்த ஓவிய திறமையை வளர்த்தெடுக்க முடிவெடுத்தான் மாரிமுத்து. ஆனால் குடும்பம் இருக்கும் சூழ்நிலையில் ஓவியம் வரைவதற்கான அட்டைகளோ வண்ணம் தீட்டும் நவீன உபகரணங்களோ வாங்க முடியாது என்பது அவனுக்கு தெளிவாக தெரிந்தது. இருப்பினும் அவன் முயற்சியை கைவிடவில்லை.
வீட்டில் இருந்த கலர் பென்சில்கள், இலைச்சாறு , விபூதி, சுண்ணாம்பு, காப்பிதூள் உள்ளிட்டவற்றைக் கொண்டு தனது வீட்டின் சுவரையே ஓவியக் களமாக மாற்றினான். சமையலைறைக்கு காய்கறி ஓவியங்கள், பிரார்த்தனை செய்யும் இடத்தில் இறை ஓவியங்கள், பின்புறத்தில் சுகாதாரத்தை உணர்த்தும் வகையிலான ஓவியங்கள் என வீட்டிற்கே மாற்று வடிவம் கொடுத்து விட்டார் மாரிமுத்து.
இதனைப் பார்த்த ஊர்மக்கள் மாரிமுத்துவை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இது குறித்து அவன் படிக்கும் பள்ளியின் ஆசிரியர்கள் கூறும் போது “ அவன் ஓவியத்தில் மட்டுமல்ல படிப்பிலும் முதல்வன் தான்” என பெருமிதத்துடன் கூறினர்.