‘பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துவைக்க வேண்டும்’ என்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, பரிந்துரை கடிதம் (மார்ச் 13) எழுதியிருந்தார். அதை ஆளுநர் ஏற்கவில்லை. கடந்த 17-ம் தேதி மறுப்பு தெரிவித்தார். இதனால் 18-ம் தேதி இதுதொடர்பாக இடைக்கால மனு தாக்கல் செய்து உச்சநீதிமன்றத்தை நாடியது தமிழக அரசு.
அந்த வழக்கில் நேற்று (மார்ச் 20) உச்சநீதிமன்றம் ஆளுநரை கடுமையாக எச்சரித்திருந்தது.
இந்நிலையில், இன்று மாலை 3.30 மணிக்கு பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும் என்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று தீர்ப்பு வெளியானதில் இருந்து ‘ஆளுநர் தனது முடிவை மாற்றிக்கொள்வாரா? பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்துவைப்பாரா’ என இன்று காலை வரை தமிழக அரசு காத்திருந்தாக கூறப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கான திமுக பிரசார பயணம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கவுள்ளதால் அதற்கு முன் இப்பணிகள் முடிவடைய திமுக தரப்பு எதிர்பார்த்துள்ளது.
இந்நிலையில் அவர்கள் எதிர்பார்த்தபடி இன்று காலையில் ‘பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும்’ என்ற அறிவிப்பு ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியான தகவலின்படி, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இன்று மாலை 3.30 மணி அளவில் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பாரதியார் மண்டபத்தில் நடைபெற்று கொண்டுள்ளதாக தெரிகிறது.
அந்த நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின், தலைமை செயலாளர் என குறைந்த அளவினரே பங்குபெற உள்ளனர். ஊடகங்களுக்கு அனுமதி இல்லை என்றும், அங்கு வழங்கும் யூடியூப் லிங்க் மூலமாக பதவி பிரமாணத்தினை காணலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக பொன்முடி அமைச்சர் பதவியை இழந்த போது, அவர் கவனித்து வந்த உயர்க்கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் பொன்முடி வந்துள்ளதால், அவர் பார்த்துவந்த உயர்க்கல்வித்துறையே மீண்டும் அவருக்கு வழங்கப்படவுள்ளது என கூறப்படுகிறது.