அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அவர் குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், தண்டனை குறித்த விவரங்களை இன்று அறிவிக்கும் என தெரிவித்திருந்தது. அதன்படி அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அபராதமாக தலா ரூ.50 லட்சம் விதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் அமைச்சர் பொன்முடியின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகளுக்காக ஒரு மாதத்திற்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பொன்முடி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, “வயதையும், மருத்துவக் காரணங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்” என கோரிக்கை வைத்த நிலையிலும் கூட பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பொன்முடி தன்னுடைய எம்.எல்.ஏ பதவியையும் அமைச்சர் பதவியையும் இழந்துள்ளார்.
அதனால் பொன்முடி வகித்து வந்த துறைகள் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக உள்ள அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு அமைச்சர் பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரையை முதலமைச்சர் ஆளுநருக்கு வழங்கியுள்ளார்.