பொங்கல் பண்டிகை மத்திய அரசின் கட்டாய விடுமுறைப் பட்டியலில் இருந்ததில்லை என்றும், விருப்ப விடுமுறைப் பட்டியலில்தான் இருந்து வருவதாகவும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி பிறந்த நாள் உள்ளிட்ட 14 நாட்கள் மத்திய அரசின் கட்டாய தேசிய விடுமுறை பட்டியலில் உள்ளன. அந்தப் பட்டியலில் ரம்ஜான், முகரம், கிறிஸ்துமஸ் மற்றும் தீபாவளி போன்ற முக்கிய மதப் பண்டிகைகளும் இடம் பெற்றுள்ளன. மேலும், 12 நாட்களை விருப்ப விடுமுறை நாட்களாக அரசு பட்டியலிட்டுள்ளது. அவற்றில் 3 முக்கிய நாட்களை அந்தந்த மாநிலங்களில் மத்திய அரசு தொழிற்சங்கங்கள் முடிவு செய்து கட்டாய விடுமுறையாக தேர்வு செய்யலாம்.மீதமுள்ள விருப்ப விடுமுறைக்கான 9 நாட்களில் 2 தினங்கள் மதரீதியாக வரையறுக்கப்பட்ட விடுமுறையாக தொழிலாளர்களின் விருப்பத்தின் பேரில் எடுத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது.
இந்த விருப்ப விடுமுறை பட்டியலில் ஹோலி, ஸ்ரீராமநவமி, மகாசிவராத்திரி, ஓணம் போன்றவை இடம் பெறுகின்றன. எனவே, கடந்த பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த நடைமுறையில் இந்த ஆண்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும், பழைய நடைமுறையே நீடிப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கட்டாய தேசிய விடுமுறைக்கான 14 நாட்களில் ஏதாவது ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் பட்சத்தில், விருப்ப விடுமுறையில் இருந்து அவற்றை நிரப்புவதும் வழக்கமாக உள்ளது. அதன்படி, கடந்த ஆண்டில் காந்தி ஜெயந்தி ஞாயிற்றுக்கிழமை வந்ததால், பொங்கல் பண்டிகை கட்டாய விடுமுறை பட்டியலில் இடம் பெற்றது. இந்த ஆண்டில் அது வழக்கம்போல விருப்ப விடுமுறைப் பட்டியலில் நீடிக்கிறது என்று மத்திய அரசு விளக்கியுள்ளது.