தமிழகம் முழுவதும் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்

தமிழகம் முழுவதும் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்
தமிழகம் முழுவதும் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்
Published on

தமிழகம் முழுவதும் உழவர் திருநாளான பொங்கல் பண்டிகையை உற்சாகத்துடனும், மண்ணின் மனத்துடனும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

தை திங்கள் முதல் நாளான இன்று, தை மகளை வரவேற்கும் விதமாக வீடுகளில் வண்ண கோலமிட்டு, தோரணம் கட்டி, கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றுடன் பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடுகின்றனர். புத்தாடை அணிந்து பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, புதுப்பானையில் புத்தரிசியிட்டு பொங்கலிட்டு வழிபாடு செய்து வருகின்றனர். 

தமிழகத்தில் பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி, கல்லூரிகளிலும் மாணவர்கள் உற்சாகத்தோடு பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். காஞ்சிபுரம் நகராட்சியில் காய்கறி கழிவுகளிலிருந்து பயோ கேஸ் தயாரித்து, அதன் மூலம் நகராட்சி ஊழியர்கள் பொங்கல் வைத்து விழா எடுத்தனர். சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் ஆதரவற்றோர் இல்லத்திலுள்ள குழந்தைகளுடன் பொங்கல் விழா கொண்டாடினர். அதில் பாரம்பரிய உடை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற காவலர்கள், விளையாடி மகிழ்ந்தனர். மேலும் விபத்தில்லா பொங்கல் விழாவை கொண்டாட வலியுறுத்தி 150 வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைக்கவசமும் வழங்கப்பட்டது.  

திட்டக்குடி அருகே பொங்கல் விழாவை ஒரே நேரத்தில் சமத்துவமாக பொங்கல் வைத்து கிராம மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அறுவடை செய்த காய்கறிகளுடன் சூரியனுக்கு நன்றி தெரிவித்து வழிபாடும் செய்தனர். செங்கோட்டையில் அனைத்து மதத்தினரும் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. அதில், பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி‌ பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். 

பெரம்பலூரில் உள்ள மனநிலை பாதிக்கப்பட்ட மீட்பு மையமான வேலா கருணை இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மனநிலை பாதிக்கப்பட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com