பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால சாதனைகளை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்பான பாஜக அறிவுசார் பிரிவின் நிர்வாகிகளுடன் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார். இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் உள்ளிட்ட அறிவுசார் பிரிவின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. தமிழக மக்களும் அவரை விரும்புகிறார்கள். பாஜகவை சரியான முறையில் வழிநடத்திச் செல்கிறார். மத்திய அரசு தமிழகத்திற்கு என்ன திட்டங்களை கொண்டுவந்துள்ளது என்று கூறுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.
11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்துள்ளோம். தேசிய ஜனநாயக கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறும். 2014-ல் பாஜக தலைமையில் நான் ஒரு கூட்டணி அமைத்தேன். பாஜக எந்த காலத்திலும் நான் தான் கொம்பன் என்று நின்றது கிடையாது. அன்று மதிமுக, பாமக, தேமுதிக என பல கட்சிகள் எங்களுடன் இருந்தார்கள். எந்த கட்சிக்கும் பெரிய ஆள் நாங்கள் என்றும் சொல்லவில்லை. அவர்களும் சொல்லவில்லை.
கூட்டணி என்று வரும்போது எல்லோரும் சமம். தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடுபவர்களை வெற்றி பெற வைப்பது எங்களுடைய கடமை. அதேபோல், எங்களை வெற்றி பெற வைப்பதும் அவர்களுடைய கடமை. இதில் பிரித்து பார்க்க முடியாது” என்றார்.