பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை, 3 ஆண்டுகளுக்கு பிறகு சாட்சி தொடங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 3 ஆண்டுகளுக்கு பிறகு சாட்சி விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது. 2019 ஆம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகார் தொடர்பாக செய்யப்பட்ட விசாரணையில், அப்பகுதி இளைஞர்கள் சிலர் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தும் அவர்களை ஆபாச வீடியோ எடுத்தும் மிரட்டி நகை, பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பல வீடியோக்கள் வெளியாகி நாட்டையே உலுக்கியதைடுத்து, பொள்ளாச்சி நகர் காவல் நிலையத்திலும், சிபிசிஐடியிலும் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. பின் முழுவதுமாக இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக முதலில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேர் மீது 2019 மே மாதத்திலேயே சிபிஐ முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. சிபிஐ தொடர் விசாரணையில், அடுத்தடுத்து பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் முன்வந்து புகார் அளித்தனர். இதையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஹேரேன் பால், பாபு மற்றும் அதிமுகவை சேர்ந்த அருளானந்தம், அருண்குமார் ஆகிய மேலும் 4 பேரை சிபிஐ கைது செய்தது. இதுவரை 8 இளம்பெண்கள் இந்த வழக்கில் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, கடந்த 2021 ஆம் ஆண்டு சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் கூட்டு பாலியல் வன்கொடுமை, பெண்கள் கடத்தல், கூட்டு சதி, மானபங்கம் செய்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி குற்றம் செய்தல் உள்ளிட்ட 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆயிரம் பக்கங்கள் கொண்ட அந்த குற்றப்பத்திரிகையில், 64 சாட்சியங்கள், 71 ஆவணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. 2021 ஆம் ஆண்டே நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை நகல் கைது செய்யபட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிலையிலும், ஓராண்டுகளாக விசாரணை தொடங்கப்படாமல் இருந்தது. இதற்கிடையே, இந்த வழக்கு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெறாமல், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள தனி அறைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், வழக்கு பதிவு செய்யப்பட்டு 3 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கின் விசாரணை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேரும் சேலம் மத்திய சிறையிலிருந்தும், அருளானந்தம், ஹேரேன் பால், பாபு, அருண்குமார் ஆகிய 4 பேரும் கோபி கிளை சிறையிலிருந்தும் காணொளி காட்சி மூலம் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களும் காணொளி காட்சி மூலம் ஆஜராகினர். அறை கதவுகள் மூடப்பட்டு இன்கேமரா முறையில் ஆன்லைன் வாயிலாக சாட்சியம் பெறப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் இளம்பெண்கள் என்பதால், வழக்கு ரகசியமாகவே கையாளப்படுகிறது. வழக்கின் அடுத்தக்கட்ட சாட்சி விசாரணை வருகிற மார்ச் 7 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.