”அடித்தட்டு மக்களுக்காகவே வாழ்ந்தவர்” - தா.பாண்டியன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்

”அடித்தட்டு மக்களுக்காகவே வாழ்ந்தவர்” - தா.பாண்டியன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்
”அடித்தட்டு மக்களுக்காகவே வாழ்ந்தவர்” - தா.பாண்டியன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்
Published on

தா.பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக (89) தா.பாண்டியன் மருத்துவமனையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவில் இருந்து மீண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சிறுநீரக தொற்று, சிறு நீரக செயலிழப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் தா.பாண்டியன் இன்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் பேசுகையில், “பல்வேறு பொறுப்புகளை திறம்பட கையாண்டவர் தா.பாண்டியன். அவரின் மறைவு கட்சிக்குமட்டுமல்லாது நாட்டிற்கே பெரிய இழப்பு. படிக்கிற காலத்தில் தொடங்கி இன்றுவரை அவர் போராடிக்கொண்டேதான் இருந்தார். கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற மாநாட்டிலும் அவர் பங்கேற்றார். அதன்பிறகு திருமண நிகழ்ச்சியிலும் கூட பங்கேற்றார். பல்வேறு போராட்டங்களில் வெற்றி பெற்ற அவர் அவரது உடல்நலப்போராட்டத்திலும் வெற்றி பெறுவார் என நம்பினோம். அந்த நம்பிக்கை பொய்த்துபோய்விட்டது. இது பேரிழப்பாகும்” எனத் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், “தா.பாண்டியன் மறைவு மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் தருகிறது. தமிழக அரசியலில் முக்கிய ஆளுமையாக திகழ்ந்தவர் தா.பாண்டியன் என்று சொன்னால் அது மிகையாகாது. இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சர்வதேச அரசியலில் எந்த பிரச்னையாக இருந்தாலும் பேசுவார். கடைசியாக மதுரை மாநாட்டில் அப்படி கர்ஜித்தவர் இவ்வளவு சீக்கிரம் பிரிவார் என்று எதிர்பார்க்கவில்லை. அவரின் மறைவு தமிழகத்திற்கே பெரிய இழப்பு என பதிவு செய்ய விரும்புகிறேன். அவர் ஒரு வெறிபிடித்த வாசிப்பாளர். நிறைய புத்தகங்களை படித்துள்ளார். படைத்துள்ளார்.” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், “தா.பாண்டியனின் மறைவு பெரிய சகாப்தத்தின் முடிவு. அவர் உடலும் உயிரும் தளர்ந்து இருந்த வேளையிலும் கூட அவரின் போர்க்குரலை அவர் ஒருநாளும் குறைத்துக்கொண்டது கிடையாது. வாழ்நாள் முழுவதும் தன்னை போராளியாகவே அடையாளப்படுத்திக்கொண்டவர். அவரின் மறைவு சமூக நீதியில் நம்பிக்கை கொண்டவர்களுக்கும், ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் மாநில உரிமை மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கும் பேரிழப்பு. அவருக்கு இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் இதய வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசும்போது “தா.பாண்டியன் மறைவு ஒட்டுமொத்த தமிழினத்திற்கே பேரிழப்பு என்று கருதுகிறேன். அடித்தட்டு மக்களுக்காகவே தன் வாழ்க்கையை அர்பணித்துக்கொண்டவர் தா.பாண்டியன். அவர் இல்லாதது தமிழக மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு. இருந்தாலும் அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் “தா.பாண்டியனின் சிம்மக்குரல் இன்னும் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இவ்வளவு விரைவில் பிரிவார் என்று எதிர்ப்பார்க்கவில்லை. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும் கட்சியினருக்கும், மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com