இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடி இன்னுயிர் நீத்த மருது சகோதரர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி, திருச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் பேசிய அவர், “முத்துராமலிங்க தேவர் மிகச்சிறந்த சுதந்திர போராட்ட வீரராக திகழ்ந்தார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உடன் நெருக்கமாக இருந்தார். ஆனால் இன்று அவரை ஒரு சாதியின் சங்க தலைவராக சுருக்கி விட்டனர்.
சுதந்திரப் போராட்ட தியாகிகள் எந்த சமூகத்தில் இருந்து வந்தார்கள் என்பதிலிருந்து அவர்களை சாதி தலைவர்களாக அடையாளப்படுத்தி, மக்களையும் ஒன்றுபடவிடாமல் தடுக்கிறார்கள். மகாத்மா காந்தி, பகத்சிங், வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டோர் தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் அவர்களையும் சாதி தலைவர்களாக மாற்றி இருப்பார்கள்.
ராபர்ட் கால்டுவெல்தான் திராவிட கருத்தியலை உருவாக்கியவர். பள்ளிப் படிப்பை பாதியில் விட்ட ராபர்ட் கால்டுவெல்லை இந்தியாவிற்கு அனுப்பினார்கள். அவர்தான் திராவிடம் என்று பிரித்துக் கூறினார். இந்தியாவிற்கு சுதந்திரம் தரக்கூடாது என தமிழ்நாட்டை சேர்ந்த சிலர் லண்டன் சென்று பிரிட்டிஷ் அரசிடம் கோரிக்கை வைத்தனர். சுதந்திர தினத்தை கருப்பு தினம் என அறிவித்தனர். அவர்களைத்தான் தமிழ்நாட்டில் கொண்டாடுகிறார்கள். இங்கு சுதந்திர போராட்ட வீரர்கள் கொண்டாடப்படுவதில்லை” என தெரிவித்திருந்தார்.
ஆளுநரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு கூறுகையில், “மருதுபாண்டியர் உள்ளிட்ட தமிழகத்தின் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றை சித்தரிக்கும் ஊர்திகளை டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் சேர்க்க முடியாது என மறுத்து மத்திய பாஜக அரசு திருப்பி அனுப்பிய போது இந்த ஆளுநர் ரவி எங்கே போனார்?
மாவீரன் பூலித்தேவனுக்கு, நினைவு மண்டபம், பாஞ்சாலங்குறிச்சியில், வீரபாண்டிய கட்டபொம்மனுக்குக் கோட்டை, மாவீரன் சுந்தரலிங்கம் வாரிசுகளுக்கு வீடு, பாரதியின் வீடு அரசு இல்லம் ஆனது, பெருந்தலைவர் காமராசருக்கு மணிமண்டபம், மூதறிஞர் ராஜாஜிக்கு நினைவாலயம், தில்லையாடி வள்ளியம்மாளுக்கு மணிமண்டபம், வீரவாஞ்சியின் உறவினருக்கு நிதி, வ.உ.சி. இழுத்த செக்கு நினைவுச் சின்னம் ஆனது, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு, இலவசப் பேருந்து பயணம், தியாகிகளுக்கு மணிமண்டபம், விடுதலைப் பொன்விழா நினைவுச் சின்னம், தியாகி விஸ்வநாத தாஸ் வாழ்ந்த இல்லம் புதுப்பிப்பு, நேதாஜிக்கு சுபாஷ் சந்திர போஸூக்குச் சிலை, தியாகி கக்கனுக்குச் சிலை, சிப்பாய் கலகத்துக்கு நினைவுத்தூண்- இப்படி நாட்டுக்காக உழைத்த தியாகிகளைப் போற்றிய இயக்கம்தான் திமுக.
விடுதலை நாளை துக்க நாளாக அறிவித்தவர்களைக் கொண்டாடுகிறார்கள் என்று நீலிக்கண்ணீர் வடித்துள்ளார் ஆளுநர் ரவி. துக்க நாள் என்று தந்தை பெரியாரும், இன்ப நாள் என்று பேரறிஞர் அண்ணாவும் ஒரே இயக்கத்தில் தங்கள் உள்ளத்துக் கருத்துகளை வெளியிட்டார்கள் என்பதுதான் தமிழகத்தின் வரலாறு. விடுதலையின் பயன் யாருக்குக் கிடைக்கும் என்பதை விளக்கிய பெரியார், ஆளுநர் ஆர்.என்.ரவி போன்ற பிற்போக்குவாத பத்தாம்பசலிகளின் கைகளில் அதிகாரம் சிக்கி நாசமாகும் என தொலைநோக்குப் பார்வையுடன் சொன்னார். அந்த தந்தைப் பெரியார்தான், மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது, இந்த நாட்டுக்கு ‘காந்தி தேசம்’ என்று பெயர் வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்” என தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ், “ஆளுநரின் அத்தனை கருத்துக்களும் எங்களுக்கு ஏற்புடையது அல்ல” என தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, காங்கிரஸ் என எந்த கட்சி ஆட்சியாக இருந்தாலும் விடுதலை போராட்ட வீரர்களுக்கு மரியாதை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ஆளுநர் யாரைச் குறை சொல்கிறார் என்று தெரியவில்லை” என தெரிவித்துள்ளார்.