தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு : அரசியல் கட்சியினர் வரவேற்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு : அரசியல் கட்சியினர் வரவேற்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு : அரசியல் கட்சியினர் வரவேற்பு
Published on

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் தடை நடவடிக்கை தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, “நல்ல வரவேற்க தகுந்த தீர்ப்பு. ஏற்கெனவே அரசு எடுத்த நிலைப்பாட்டை உயர்நீதிமன்றம் வலு சேர்த்துள்ளது. அரசின் நிலைப்பாடு என்பதே கொள்கை முடிவுதான். தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குமாறு நடிப்பவர்களை எழுப்பமுடியாது. இந்த ஆலையே தேவையில்லை என்பதே அரசின் நிலைப்பாடு” எனத் தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி கனிமொழி கூறுகையில், “நிச்சயமாக வரவேற்கத்தகுந்த தீர்ப்பு. மக்கள் உயிரை கொடுத்து பெற்றிருக்கக்கூடிய வெற்றி. அரசு கொள்கை முடிவு எடுத்து தடுக்க வேண்டும். கொள்கை முடிவு எடுத்தால் இன்னும் வலு சேர்க்கும். அங்கு வேலைபார்த்துக்கொண்டிருந்தவர்கள் வேலையிழந்திருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நாம் கொடுக்கக்கூடிய விலை என்ன என்பதை பார்க்க வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. சுற்றுச்சுழலை விலையாக கொடுத்து கிடைக்கும் வளர்ச்சி ஆபத்தானது என்பதை இத்தீர்ப்பு உணர்த்துகிறது.” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து வைகோ கூறுகையில், “ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு நீதிக்கு கிடைத்த வெற்றி. மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. 13 உயிர்களின் ரத்தத்திற்கு கிடைத்த நீதி என்றே நான் கருதுகிறேன். 26 ஆண்டுகள் நீதிமன்றத்திலும், மக்களுக்காகவும் போராடியத்திற்கு கிடைத்த வெற்றி. மதிமுகவுக்கு இதைவிட மகிழ்ச்சியான செய்தி வேறொன்றும் இருக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து பாஜகவின் சீனிவாசன் கூறுகையில், “ஸ்டெர்லைட் வந்த ஆரம்பகாலத்திலேயே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்திருக்கிறோம். ஆனால் இப்போது பல்வேறு விஷயங்களை பார்க்க வேண்டியுள்ளது. இப்போது நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், “ஸ்டெர்லைட் தடை தொடரும் என்கின்ற நீதிமன்றத் தீர்ப்பு பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி. இத்தீர்ப்பின் அவசியத்தை, அவர்களின் வலியை, அருகில் இருந்து உணர்ந்த சகோதரன் நான். மக்களின் குரல் என்றும் வெல்லும் என்பதற்கு இது மற்றுமொரு சான்று” எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com