சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் நேற்று (செப்.2) ’சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெற்றது. இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ”கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். அதை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் வேலையாக இருக்கவேண்டும்” என்ற கருத்தில் பேசியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக ஐ.டி பிரிவு தலைவர் அமித் மால்வியா, “சனாதன தர்மத்தை பின்பற்றும் 80 சதவீத மக்களை இனப்படுகொலை செய்ய அமைச்சர் உதயநிதி அழைப்பு விடுத்துள்ளார்” என குற்றம்சாட்டினார். அதற்குப் பதலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களை இனப்படுகொலைக்கு அழைக்கவில்லை. பல சமூகக் கேடுகளுக்கு சனாதன தர்மம்தான் காரணம் என்று நம்புகிறேன்” என தெரிவித்தார்.
மறுபுறம், Legal Rights Observatory- LRO (சட்ட உரிமை கண்காணிப்பகம்) என்ற பெயரிலான ஒரு என்.ஜி.ஓ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பதிவைப் பகிர்ந்து, அதன்பேரில் புகார் ஒன்று அளிக்கப்படுமென கூறியது. இதை ரீ-ட்வீட் செய்த அமைச்சர் உதயநிதி, “கொண்டு வாருங்கள், நான் எந்தச் சட்ட சவாலையும் சந்திக்கத் தயாராக உள்ளேன். இதுபோன்ற சனாதன மிரட்டல்களுக்கு அடிபணிய மாட்டேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையின்கீழ் சமூக நீதியை நிலைநாட்டுவோம். நாங்கள் பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதியைப் பின்தொடர்பவர்கள். இதனை இன்றும், நாளையும் என்றும் சொல்வேன். திராவிட மண்ணில் சனாதனத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எங்களது தீர்மானத்தில் பின்வாங்க மாட்டோம்” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் இதுதொடர்பாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வினீத் ஜிண்டாலும் டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார். ‘உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சு சட்டவிரோதமானது. அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி அவர் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், ’உதயநிதி ஸ்டாலினின் பேச்சு சனாதன தர்மத்துக்கு எதிராக மக்களைத் தூண்டக்கூடியதாகவும், இழிவுபடுத்தக்கூடியதாகவும் உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் பேச்சு இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களை அழிக்க வேண்டும் என அழைப்பு விடுப்பதாகவும், அதை தூண்டுவதாகவும் உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சு இந்திய தண்டனைச் சட்டம் 153A, 153B, 295A, 298, 505 ஆகிய பிரிவுகளின்கீழ் தண்டனைக்குரியது. எனவே, அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா, ராமஜென்ம பூசாரி ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் உள்ளிட சிலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலை, “மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைத் தாண்டிச் செல்வத்தைக் குவிப்பதுதான் கோபாலபுரம் குடும்பத்தின் ஒரே உறுதி. உதயநிதி ஸ்டாலின் அவர்களே.. நீங்கள், உங்கள் தந்தை ஆகியோர் கிறிஸ்தவ மிஷனரிகளிடம் இருந்து வாங்கிய ஐடியாவைக் கொண்டிருக்கிறீர்கள். அந்த மிஷனரிகளின் எண்ணம், அவர்களின் தீய சித்தாந்தத்தை வளர்க்க உங்களைப் போன்ற மந்தமானவர்களை வளர்க்க வேண்டும் என்பதுதான். தமிழகம் ஆன்மிக பூமி. இதுபோன்ற நிகழ்வில் மைக்கைப் பிடித்து உங்கள் விரக்தியை வெளிப்படுத்துவதுதான் உங்களால் செய்ய முடிந்த ஒரேவிஷயம்” என பதிவிட்டிருந்தார்.
தொடர்ந்து புதுக்கோட்டையில் இதுதொடர்பாக பேசிய அவர், “சனாதன தர்மத்தை ஒழிக்க உதயநிதி யார்? சனாதனம் ஒழிக்கப்பட்டுவிட்டால், கோயில்கள் மற்றும் மதச்சடங்குகள் அனைத்தும் அழிந்துவிடும்“ என தெரிவித்தார்.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இன்று ராஜஸ்தானில் நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், “காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான அரங்கில்தான் இந்து மதத்தை அவமதித்து அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார்.
உதயநிதியின் வெறுப்பு பேச்சுடன் காங்கிரஸ் உடன்படுகிறதா என்பதை அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும். மதத்தை விமர்சித்ததற்காக அமைச்சர் உதயநிதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டின் கலாசாரம், சனாதன தர்மத்தை INDIA கூட்டணி அவமதித்து வருகிறது; வாக்குவங்கி அரசியலுக்காக INDIA கூட்டணி எந்த எல்லைக்கும் செல்லலாம்” எனத் தெரிவித்துள்ளார்.