இந்திய மக்களின் ஒரு அங்கமாகவே மாறியிருக்கும் நிறுவனம் LIC. எதிர்கால நலன் சார்ந்து மட்டுமல்லாமல், பலருக்கு வேலைவாய்ப்பையும் வழங்கிவருகிறது. கடந்த மாதம் வரை ஆங்கில மொழியில் இருந்த LIC வலைத்தளம், இந்த மாதம் முதல் முழுவதுமாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. மாற்று மொழிகளாக ஆங்கிலமும், மராத்தியும் தரப்பட்டிருக்கிறது.
ஆனால், ஆங்கிலத்துக்கு மாற்ற வேண்டும் என்றாலும், भाषा (மொழி என பொருள்படும் இந்தி சொல்) என்பதைத்தான் தேடிப்பிடித்து அழுத்த வேண்டும். ஆங்கில மொழிக்கு மாற்றிக்கொள்ள விரும்புகிறீர்களா என ஒரு PoP UP நோட்டிஃபிகேஷன் வருகிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதுவும் இந்தியில்தான் வருகிறது. ஆங்கில மொழியில் மாற்ற வேண்டுமா என்பதற்கு இந்திலும்; இந்தி மொழியில் மாற்ற வேண்டுமா என்பதற்கு ஆங்கிலத்திலும் POP UP தந்திருக்கிறார்கள்.
இந்தி புரியாத மக்கள், LIC தளத்தை பயன்படுத்த வேண்டாமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்தியா முழுக்க இருக்கும் மக்கள் பயன்படுத்தும் ஒரு வலைத்தள பக்கம் ஏன் இந்தியில் இருக்கிறது. ஏற்கெனவே , சில மத்திய அரசின் பக்கங்களின் default மொழி இந்திக்கு மாற்றப்பட்டிருப்பது சர்ச்சையாகியிருக்கும் சூழலில், LICயின் பக்கமும் default ஆக இந்திக்கு மாறியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
இதுகுறித்து மதுரை பாராளுமன்ற தொகுதி MP சு வெங்கடேசன் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில், "இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் தனது இணையத்தள முகப்பை இந்தியில் மாற்றி உள்ளது.
ஆங்கிலத் தெரிவு இருக்கிறது என்பதையே இந்தியில் "பாஷை" என்று எழுதியிருக்கிறார்கள்.
எல். ஐ. சி யின் வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசின் முயற்சியை கண்டிக்கிறேன்" என கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதேபோல சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கண்டனம் தெரிவித்துள்ளார் அவர். தன் பதிவில் அவர், “பொதுத்துறை நிறுவனமான LIC இந்தியாவின் இணையதளத்தில் இயல்பு நிலை மொழியாக (Default Language) இந்தி மாற்றப்பட்டிருக்கிறது. இந்தி மொழி தெரியாத மக்களுக்கு தற்போது LIC-யின் இணையதளம் பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது. இணையதளத்தின் மொழி மாற்றும் விருப்பமும் இந்தி மொழியிலேயே இருப்பதால் அதனை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது.
எங்கு, எதில் எப்படி இந்தியை திணிக்கலாம் என்ற முனைப்பிலேயே மத்திய அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது. மொழி, பண்பாடு, அமைப்பு, அரசியல் என எல்லாவற்றிலும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒற்றைத்தன்மையை திணிப்பது நாட்டின் சமநிலையை பாதிக்கும் செயல். அது ஏற்புடையதல்ல. அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் இணையதளத்தின் இயல்புநிலை மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றவும், இந்தி மொழியைத் திணிக்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவேண்டாம் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்” என்றுள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் “எல்ஐசி இணையதளம் இந்தி திணிப்புக்கான பிரச்சார கருவியாக மாற்றப்பட்டுள்ளது. ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கும் விருப்பம் கூட இந்தியில் காட்டப்படுகிறது!
இது இந்தியாவின் பன்முகத்தன்மையை மிதித்து, பலவந்தமாக கலாசார மற்றும் மொழி திணிப்பு தவிர வேறில்லை. எல்ஐசி அனைத்து இந்தியர்களின் ஆதரவுடன் வளர்ந்தது. இந்த மொழியியல் கொடுங்கோன்மையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோருகிறோம்” என்கிறார்.