பல மாதங்களாக முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பானை உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு பல மாதங்களாக குடிநீர் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்தும், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும் இன்று தட்டப்பாறை கிராமத்தில் பானை உடைக்கும் போராட்டத்திற்கு அப்பகுதி மக்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பொது மக்களை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து சம்பவ இடத்திர்க்கு வந்த அதிகாரிகள் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும் அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.