செய்தியாளர் ஆனந்தன்
சென்னை முகப்பேர், அண்ணா நகர், திருமழிசை, பெரம்பூர், எழும்பூர், சாந்தோம், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், கீழ்ப்பாக்கம், கே.கே.நகர், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் உள்ள சில தனியார் பள்ளிகளுக்கு புரோட்டான் என்ற மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு இருப்பதாக அடுத்தடுத்து தகவல் சென்றது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மோப்ப நாய், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அதில் அந்தப் பள்ளிகளில் சந்தேகத்துக்குரிய வகையில் எந்த வெடி பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதையடுத்து புரளியை ஏற்படுத்தும் நோக்கில் மிரட்டல் மின்னஞ்சல் வந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் தரப்பில் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சைபர் க்ரைம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை பிடிக்க, சுவிட்சர்லாந்தில் உள்ள இண்டர்போல் போலீசாரின் உதவியை நாடியுள்ளது காவல்துறை. அந்த e mail id இந்தியாவில் இருந்து வந்தது என்றால் அந்த நபரை அடையாளம் கண்டு அவரை கைது செய்வோம் என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.