எங்கே இருக்கிறது மயிலாப்பூர் வரலாற்றை சொல்லும் மயில் சிலை? தீவிரமாக தேடும் காவல்துறை

எங்கே இருக்கிறது மயிலாப்பூர் வரலாற்றை சொல்லும் மயில் சிலை? தீவிரமாக தேடும் காவல்துறை
எங்கே இருக்கிறது மயிலாப்பூர் வரலாற்றை சொல்லும் மயில் சிலை? தீவிரமாக தேடும் காவல்துறை
Published on

மயிலாப்பூர் வரலாற்றை சொல்லும் மயில் சிலை எங்கே என தெப்பக்குளத்திற்குள் இறங்கி தேடி வருகிறது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு.

பல்லவர்களால் கடந்த 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில். பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததால் இந்த கோயில் அமைந்துள்ள பகுதியும் மயிலாப்பூர் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. மிகவும் தொன்மை வாய்ந்த இந்த கோயிலில் புன்னைவன நாதர் சன்னதியில் லிங்கத்தை மலரால் மயில் அர்ச்சனை செய்வது போல சிலை இருந்ததாகவும் கடந்த 2004-ம் ஆண்டிற்கு பிறகு அந்த சிலை மாயமாகி விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது. இதைபோல ராகு, கேது சிலைகளும் மாயமானதாக புகார் எழுந்தது.

கடந்த 2004 ஆம் ஆண்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்பு அங்குள்ள புன்னைவன நாதர் சன்னிதியில் இருந்த தொன்மை வாய்ந்த மயில் சிலைக்கு பதிலாக வேறொரு மயில் சிலை மாற்றி வைக்கப்பட்டதாகவும், உண்மையான சிலை திருடப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், சிலை மாயமானது குறித்து விசாரணை நடத்த சிலை கடத்தல் தடுப்பு காவலர்கள் மற்றும் உண்மை கண்டறியும் குழுவினர் ஆகியோரை இணைத்து விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். 6 வார காலத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதைத்தொடந்து, `ஆகம விதிப்படி கோயில்களில் தொன்மை வாய்ந்த சிலைகளை தெப்பக்குளத்தில் மறைத்து வைக்கும் முறை இருப்பதால், திருடுபோன தொன்மை வாய்ந்த மயில் சிலை மயிலாப்பூர் தெப்பக் குளத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா?’ என்ற சந்தேகம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் 3 சிலைகளையும் தேடும் பணியில் ஈடுபட உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதையடுத்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பி அசோக் நடராஜன் தலைமையிலான போலீசார் இன்று மயிலாப்பூர் கபாவீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்திற்கு சென்றனர். மேலும் தெப்பக்குளத்தில் இறங்கி தேடுவதற்காக தீயணைப்புதுறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் தலைமையில் குழு அங்கு வந்தது.

10 க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து சுமார் 70க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இன்று காலை 11 மணி முதல் தெப்பக்குளத்தில் இறங்கி 3 சிலைகளையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு துறை வீரர்கள் ரப்பர் படகு மூலம் ஒரு குழுவும், நீச்சல் வீரர்கள், குளத்தின் ஆழத்திற்குள் சென்று தேடும் பணியில் "ஸ்கூபா" வீரர்கள் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 45 நிமிடங்கள் தாங்கும் திறன் கொண்ட ஆக்சிஜன் உடையணிந்து "ஸ்கூபா" வீரர்கள் தெப்பக்குளத்தின் அனைத்து பகுதிகளின் ஆழத்திற்குள் சென்று தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 190 மீ நீளமும் 143 மீ அகலமும் கொண்ட இந்த தெப்பக்குளத்தில் தேடுவது என்பது மிகவும் சவாலான ஒன்று என்பதால் இடைவெளி விட்டு விட்டு தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது 8 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதாலும் 5 அடிக்கு குளத்தினுள் முழுவதுமாக சேறும் சகதியுமாக இருப்பதால் சிலையைத் தேடும் பணியில் சற்று சிரமம் இருப்பதாக தீயணைப்பு வீரர்கள் கூறியுள்ளனர். இந்த தேடும் பணி இன்று இரவு நீட்டிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலாப்பூர் வரலாறை சொல்லும் மயில் சிலை, ராகு, கேது சிலைகள் உண்மையிலேயே தெப்பக்குளத்தில் தான் கிடைக்கிறதா? என்பது தேடி முடித்த பிறகே தெரிய வரும் என்கின்றனர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ்.

- சுப்ரமணியன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com