10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி? - கூடுதல் ஆணையர் தினகரன் 

10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி? - கூடுதல் ஆணையர் தினகரன் 
10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி? - கூடுதல் ஆணையர் தினகரன் 
Published on

முகப்பேரில் குழந்தை கடத்தப்பட்டு 10 மணிநேரத்தில் மீட்கப்பட்டது எப்படி என்பது குறித்து கூடுதல் ஆணையர் தினகரன் விளக்கமளித்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ குழந்தை பள்ளி பேருந்தில் இருந்து இறங்கியதாகவும் வேலைக்காரப்பெண் குழந்தையை தூக்கி வந்ததை பார்த்ததாகவும் பெற்றோர் புகாரில் தெரிவித்திருந்தனர். அப்போது வேறு வேலை இருந்ததால் அதை கவனிக்க சென்றுவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தனர். 

திரும்ப வந்து பார்க்கும்போது வேலைக்காரப்பெண்ணையும் குழந்தையும் காணவில்லை என்றும் பணிப்பெண்தான் குழந்தையை கடத்தியிருப்பார் எனவும் புகார் அளித்திருந்தனர். 

புகாரின் பேரில் விசாரிக்கும்போது, அங்கு சிவப்பு கலர் கார் வந்ததாகவும் அதில்தான் குழந்தை கடத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் சந்தேகத்தின்பேரில் அங்கிருந்த சிசிடிவியை ஆய்வு செய்தோம். அந்த சமயத்தில் 2 மணிக்கு ஒரு மிரட்டல் கால் குழந்தையின் பெற்றோருக்கு வந்துள்ளது. அதில் பேசிய ஆண் ஒருவர் வேலைக்காரியையும் குழந்தையையும் கடத்திவிட்டோம் எனவும் ரூ. 60 லட்சம் பணம் வேண்டும் எனவும் மிரட்டியுள்ளான். அதையும் அவர்கள் காவல்நிலையத்தில் கூறினர். 7 தனிப்படைகள் அமைத்து குழந்தையை தேடி வந்தோம். 

இதையடுத்து அந்த பணிப்பெண்ணின் செல்போனுக்கு வந்த கால்களை டிராக் செய்யும்போது அவரின் காதலர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த பணிப்பெண்ணும் அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் இங்கு வேலைக்கு சேர்ந்துள்ளார். 

இதைத்தொடர்ந்து அப்பெண்ணின் காதலர் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு சென்று விசாரிக்க சென்றோம். அப்போது அவர் வேலைக்கு வராதது தெரியவந்தது. இதனால் எங்களின் சந்தேகம் அதிகமானது. தொடர்ந்து சிகப்பு நிற கார் இருக்கும் இடத்தையும் அப்பெண்ணின் செல்போன் டவர் இருக்கும் இடத்தை வைத்தும் அவர்கள் எந்த எல்லையில் இருப்பார்கள் என யூகிக்க முடிந்தது. 

அதன்படி செங்குன்றம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான காரை வழிமறித்து குற்றவாளியை விசாரித்தோம். அப்போது அவனும் காதலியும் சேர்ந்துதான் குழந்தையை கடத்தினோம் என்பதை ஒப்புக்கொண்டார். அவர் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்துள்ளார். அதில் பெரிதாக வருமானம் இல்லை. இருந்தாலும் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. ஆனால் கடத்தல் தொழிலில் அனுபவம் இல்லாததால் யூடியூப்பை பார்த்து இதில் ஈடுபட்டுள்ளார். 

விசாரணையில் நீலாங்கரையில் தனியார் விடுதியில் வைத்திருப்பதாக தகவல் வந்தது. உடனே நீலாங்கரை காவல் ஆய்வாளரை தொடர்பு கொண்டு குழந்தையை மீட்டோம். எங்களுக்கு தகவல் வந்த 8 மணிநேரத்தில் குழந்தையை மீட்டுள்ளோம். 

தனியார் செயலிகள் மூலம் வேலைக்கு ஆட்களை எடுக்காதீர்கள். அவர்களின் பின்னணி என்ன என்று தெரியாமல் வேலைக்கு வைக்காதீர்கள். இதுத்தொடர்பாக cctns என்ற இ- சர்வீஸ் ஆரம்பித்துள்ளோம். வேலை அல்லது தனிப்பட்ட நபரை பற்றி தெரிந்து கொள்ள 1000 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும். அவர்களை பற்றிய அனைத்து தகவல்களையும் காவல்துறையே உங்களுக்கு தரும். ஆன்லைனில் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்" என்றார் அவர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com