செய்தியாளர் - தங்கராஜு
கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆனந்தபாபு என்பவர், தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், தருமபுரி மாவட்ட பெண்ணாகரத்தில் நடைபெறும், உறவினர் இல்ல திருமணத்திற்காக குடும்பத்துடன் கோயமுத்தூரில் இருந்து காரில் வந்துள்ளார். இந்த திருமணம் முடிந்து மதியம் தருமபுரிக்கு வந்துள்ளார். அங்கு, பேருந்து நிறுத்தம் அருகே காரை நிறுத்தி குடும்பத்துடன் குளிர்பானம் அருந்தியுள்ளனர். அப்போது, அவர்களின் நான்கு வயது மகன் பிரித்திவி, பேருந்து நிறுத்தத்தில் திடீரென காணாமல் போனார்.
இதனால், குழந்தையை யாரோ மர்ம நபர்கள் கடத்தி விட்டதாக அச்சமடைந்த ஆனந்தபாபு, தருமபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பேருந்து நிறுத்த பகுதியில் குளிர்பானம் குடித்தபோது தனது மகனை யாரோ கடத்திச் சென்று விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், குழந்தையை மீட்பதற்காக அதிரடியாக களத்தில் இறங்கினர். தொடர்ந்து, பேருந்து நிறுத்த பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அங்கு கடைகளில் இருந்த சிசிடிவி வீடியோ காட்சிகளையும் ஆய்வு செய்தனர். காரில் இருந்து இறங்கிய அனைவரும் குளிர்பானம் குடிப்பதில் ஆர்வமாக இருந்த நேரத்தில், சிறுவன் பிரித்திவி அங்கு வந்த பேருந்தில் ஏறி சென்றது தெரியவந்தது.
இதனால், பேருந்தில் ஏறிய மர்ம நபர் சிறுவனிடம் பேசி அவனை பேருந்தில் அழைத்துச்சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்தனர். தொடர்ந்து, அந்த பேருந்து குறித்தும் சிறுவன் அடையாளங்கள் குறித்தும் ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக பேருந்து நிலையம் சென்ற ஓமலூர் போலீசார், அங்கு வந்த தனியார் பேருந்தில் சிறுவனை தேடினர். பின்பக்க சீட்டில் சிறுவன் அமர்ந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுவன் குறித்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, சிறுவனை யாரும் அழைத்து வரவில்லை என்றும் அவனாகவே பேருந்தில் ஏறி அமர்ந்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, சிறுவனை மீட்ட போலீசார், ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்புடன் அமர வைத்தனர். மேலும், சிறுவனுக்கு விளையாடுவதற்கு விளையாட்டு பொருட்களையும், தின்பண்டங்களையும் வாங்கிக் கொடுத்தனர். அப்போது, சிறுவனோ எந்தவித பயமும் இன்றி ஜாலியாக விளையாடிக் கொண்டும், சாப்பிட்டுக் கொண்டும் இருந்த நிலையில், தருமபுரி போலீசாருக்கு இதுதொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கிருந்து காரில் வந்த போலீசார் சிறுவனை மீட்டுச் சென்றனர். சிறுவன் கடத்தப்பட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் அதிரடியாக நடவடிக்கை எடுத்து ஒரு மணி நேரத்தில் சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து சிறுவன் கடத்தப்பட்டதாக இருந்த புகாருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
தொடர்ந்து, பெற்றோருக்கும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. “வெளியிடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றால் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளை தனியாக எங்கும் விடக்கூடாது, எப்போதும் கையைப்பிடித்துக் கொண்டு அழைத்துச் செல்ல வேண்டும்” என்பன உட்பட பல்வேறு ஆலோசனைகளை, பெற்றோருக்கு வழங்கிய போலீசார், குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்து அனுப்பி வைத்தனர்.