பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற காவலர், அன்றைய தினமே விடுவிப்பா? - நீதிமன்றம் அதிருப்தி

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற காவலர், அன்றைய தினமே விடுவிப்பா? - நீதிமன்றம் அதிருப்தி
பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற காவலர், அன்றைய தினமே விடுவிப்பா? - நீதிமன்றம் அதிருப்தி
Published on

சங்கரன்கோயில் பேருந்து நிலையத்தில், நரிக்குறவர் இன பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற காவலர், அன்றைய தினமே விடுவிக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளது.

சங்கரன் கோயில் பேருந்து நிலையத்தில் காவலர் ஒருவர் நரிக்குறவர் இனப்பெண்ணை பாலியல் உறவுக்கு வற்புறுத்தியும், அதற்கு பணம் தருவதாகவும் கூறி தொல்லை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் தவறான நடவடிக்கையில் ஈடுபட்ட காவலர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதனையறிந்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன் வந்து இந்த வழக்கை விசாரித்தது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையில் நீதிபதிகள் பேசும் போது, “சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள், செய்தித்தாள்களில் சுட்டிக்காட்டப்படும் சம்பவங்கள், குறைகள் மற்றும் பொது சொத்துக்கள் சேதமடைந்து இருத்தல் போன்ற விபரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக, அனைத்துத்துறை அதிகாரிகளையும் கொண்ட தனி அமைப்பை ஏன் உருவாக்கக் கூடாது?” என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் இவ்வமைப்பு உருவாக்கம் பற்றி கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த தனி அமைப்பு மூலம் ஊடகங்களில் வரும் செய்திகளை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, தீர்வு காண ஏதுவாக அமையும் எனக்கூறி இது குறித்து தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலர், தமிழக காவல்துறை தலைவர் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

காவலரின் தவறான நடவடிக்கை சம்பந்தமாக பேசிய நீதிபதிகள், “சம்பவம் நிகழ்ந்த அன்றே சம்பந்தப்பட்ட காவல்துறையைச் சேர்ந்த நபர் விடுவிக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. அவருக்கு எவ்வாறு, எதனடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டது?. சங்கரன்கோவில் நீதித்துறை நடுவர் நரிக்குறவர் இன பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற காவல்துறையை சேர்ந்த நபருக்கு ஜாமீன் வழங்கியது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன் பேருந்து நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com