தமிழக - கேரள எல்லையோரங்களில் உள்ள காவல் நிலையங்களில் மாவோயிஸ்ட்டுகள் திடீரென தாக்குதல் நடத்தினால், அதனை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து நீலகிரி காவல்துறையினர் ஒத்திகை நடத்தினர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூரில் உள்ள தமிழக -கேரளா எல்லையில் 8 காவல்நிலையங்கள் உள்ளன. கூடலூரை ஒட்டிய கேரளா மாநிலம் வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. கேரளாவில் உள்ள அரசு கட்டிடங்கள் மீது ஏற்கனவே மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்திய சம்பவமும் நடந்துள்ளது. இந்நிலையில் தமிழக - கேரள எல்லையோரங்களில் உள்ள காவல் நிலையங்களில் மாவோயிஸ்ட்டுகள் திடீரென தாக்குதல் நடத்தினால், அதனை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து நீலகிரி காவல்துறையினர் ஒத்திகை நடத்தினர்.
இந்த ஒத்திகையின்போது மாவோயிஸ்ட்டுகள் போன்று வேடமணிந்தவர்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி காவல்நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிரப்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மாவோயிஸ்ட் போன்று வேடமணிந்தவர்களை கைது செய்து, காவல்நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். காவல்துறையினரின் தத்ரூபமான ஒத்திகை மசினகுடி பகுதி மக்களை கதிகலங்கச் செய்தது. இறுதியில் அது ஒத்திகை எனத் தெரியவந்ததால் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.