மதுரையில் அடுத்தடுத்து சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்ட நிலையில், விரைந்து சென்று தீயை அணைத்துள்ளனர் தீயணைப்புத்துறை. இதன்மூலம் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகர் சுப்பிரமணியபுரம் மூன்றாவது தெரு பகுதியில் உள்ள பாலசுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான செவ்வேல் என்ற பேக்கரி செயல்பட்டு வருகிறது. இந்த பேக்கரியில் இன்று காலை சிலிண்டரை மாற்றும்போது திடீரென வாயு கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடை உரிமையாளர்கள் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்துசென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
பின்னர் சாக்குகளை பயன்படுத்தி சிலிண்டர் மேலும் வெடிப்பதை தவிர்த்தனர். தொடர்ந்து கடையில் சில இடங்களில் தீ பரவ தொடங்கியதையடுத்து உடனடியாக அந்த பகுதி முழுவதும் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து கடைக்கு செல்லக்கூடிய மின்சாரம் இணைப்பு துண்டிக்கப்பட்டது இதயைத்து கடையில் உள்ள சிலிண்டர்கள் பத்திரமாக வெளியில் கொண்டு செல்லபட்டது.
பேக்கரியின் அருகிலயே குடியிருப்பு பகுதிகள் இருந்ததால் சிலிண்டர் தீ விபத்து ஏற்பட்டதால் பொதுமக்கள் அலறியடித்து ஓடியதால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோன்று மதுரை கோமதிபுரம் 6ஆவது தெரு பாரதி தெரு பகுதியில் குமார் என்பவரது வீட்டில் நடைபெற்ற சுப நிகழ்ச்சியின் போது, சமையலறையில் சிலிண்டர் ரெகுலேட்டரை மாற்றும் போது சிலிண்டர் எரிவாயு கசிவு ஏற்பட்டது.
அங்கு திடீரென தீ பரவி வெடித்தபோது எண்ணெய் சட்டி மற்றும் சமையல் பொருட்கள் ஆங்காங்கே தூக்கி விசப்பட்டது. இதனையடுத்து தல்லாகுளம் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீ பரவ விடாமல் தடுத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மதுரையில் அடுத்தடுத்து சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து ஜெய்ஹிந்த்புரம் மற்றும் அண்ணாநகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.