செய்தியாளர் ஆவடி நவீன் குமார்
சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்த கிருபாகரன் மற்றும் மதுரவாயலை சேர்ந்த 16 வயது சிறுவன இருவரும் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் உள்ள கால்பந்து ட்ரைனிங் அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர். நேற்று இரவு பயிற்சி முடிந்து அருகே உள்ள உணவகத்தில் உணவு வாங்க சென்றுள்ளனர். அப்போது பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் தங்கள் வீட்டின் அருகே அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது உணவு வாங்கிக்கொண்டிருந்து கிருபா மற்றும் சிறுவன் இருவரையும் அழைத்து மனோவின் மகன்கள் ரஃபிக், சாஹீர் மற்றும் அவரது 3 நண்பர்களும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் கிருபாவுடன் வந்த சிறுவன் அங்கிருந்து தப்பியோடி ரோந்துப்பணியில் இருந்த காவல்துறையினரை அழைத்து வந்துள்ளார். ஆனால், காவலர்கள் எதிரிலேயே கிருபா மற்றும் சிறுவனை தாக்கிய மனோவின் மகன்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள், தகாத வார்த்தைகளிலும் திட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களின் நண்பர்கள் இதுதொடர்பாக கூறுகையில், “நாங்கள் கால்பந்து ப்ளேயர்கள். கால்பந்து விளையாடிக் கொண்டு இருந்தோம். டர்ஃபில் விளையாடிவிட்டு கிளம்பும்போது, நண்பர்கள் இருவர் உணவு வாங்க வேண்டும் என சென்றனர். அப்போது, மனோவின் மகன்கள் அவர்களை ஆபாசமாக பேசி அழைத்துள்ளனர். அப்போது என்னை எதற்கு அப்படி பேசுகிறீர்கள் என கேட்டதற்கு, 5 பேர் சேர்ந்துகொண்டு நண்பரை அடித்துள்ளனர். உடனே அவர்கள் எங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். உடனடியாக நாங்கள் அங்கு சென்றோம். எங்களை என்ன ஆகிற்று என்று கேட்கக்கூடவிடவில்லை. கட்டைகளால் மாத்தி மாத்தி அடித்தார்கள். காவல்துறையினர் வந்தும் கூட அவர்கள் முன்பும் எங்களை அடித்தார்கள்.
காவல்துறையினர் முன்பு கூட எங்களை ஆபாசமாக திட்டுகின்றனர், யாராலும் எங்களை எதுவும் செய்ய முடியாது என தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்டது நாங்கள்தான். ஆனால், காவல்துறையினர் எங்கள் செல்போன், பைக் எல்லாத்தையும் வாங்கிக்கொண்டு எங்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். 16 வயது சிறுவனை சாலையில் முட்டிபோட வைத்து தேங்காய் மட்டைகளாலும், கட்டைகளாலும் அடித்துள்ளனர். காவல்துறையினர் எங்களை மட்டும்தான் துரத்தினர். அவர்களிடம் செல்போன்கள் கூட பறிமுதல் செய்யவில்லை” என தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் கிருபாகரனுக்கு தலையில் காயம் ஏற்பட்ட நிலையில், சிறுவனுக்கும் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கிருபாகரன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து மருத்துவமனை அளித்த தகவலின் பேரில், சென்னை வளசரவாக்கம் காவல் காவல்துறையினர் நேற்றிரவு விசாரணைக்காக பாடகர் மனோவின் மகன்கள் உள்ளிட்ட 5 பேரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதைத்தொடர்ந்து இன்று பாடகர் மனோவின் மகன்கள் ரஃபிக், சாஹீர் மற்றும் 3 நண்பர்கள் மீது ஆபசமாக பேசுதல், தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மனோ மகன்களின் நண்பர்கள் இருவரை போலீஸார் கைது செய்துள்ள நிலையில், மற்ற ஒரு நண்பரும், மனோவின் 2 மகன்களும் இன்று தலைமறைவாகியுள்ளனர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.