சென்னையில் இன்று முழு ஊரடங்கு (144 தடை) உத்தரவை மீறியவர்கள் 2436 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் மீண்டும் முழு ஊரடங்கைத் தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இன்றிலிருந்து ஜூன் 30 ஆம் தேதிவரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, மறைமலைநகர் நகராட்சிகள், நந்திவரம், கூடுவாஞ்சேரி பேரூராட்சிகள், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் முழு ஊரடங்கு உத்தரவை மீறிய 2436 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதில் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் தனிமனித இடைவெளி பின்பற்றாதவர்கள் மீது பதிவான வழக்குகள் 989 என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முழு ஊரடங்கைப் பின்பற்றாமல் சுற்றிய 1997 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் இருசக்கர வாகனங்கள் 1883, மூன்று சக்கர வாகனங்கள் 67, நான்கு சக்கர வாகனங்கள்- 47 ஆகும்.