போக்குவரத்து விதிகளை பின்பற்றி தலைக்கவசம் அணிந்து பயணிக்கும் வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் கூல்டிரிங்ஸ் மற்றும் தொப்பிகளை காவல்துறையினர் வழங்கினர்.
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மதுரை தெப்பக்குளம் பகுதியில் இருந்து பெரியார் பேருந்து நிலையம், விரகனூர் மற்றும் விமானநிலையம் செல்லும் சாலையில் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் அருகே மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து ஆய்வாளர் தங்கமணி மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் இணைந்து இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து போக்குவரத்து விதிகளை பின்பற்றி முறையாக தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் பயணித்த வாகன ஓட்டிகளை ஊக்கப்படுத்தும் வகையில் கோடைகாலத்தையொட்டி குளிர்பானம் மற்றும் தொப்பிகளை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் வழங்கினர்.
மேலும் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். தலைக்கவசம் அணிவதால் விபத்து ஏற்பட்டாலும் உயிரிழப்பு தவிர்க்கப்படுகிறது. அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்க வேண்டும். குடிபோதையில் வாகனங்களை இயக்கக்கூடாது என அறிவுரை வழங்கினர்.