கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி சத்திரம் அருகே பிரபல யூ-ட்யூபர் டிடிஎஃப் வாசன் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து பாலுசெட்டி காவல் துறையினர் ‘பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டியது’ உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வாசன் மீது வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
40 நாட்களுக்குப் பிறகு நீதிமன்ற ஜாமீன் பெற்ற வாசன், நாள்தோறும் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்துட்டு வருகிறார்.
இந்நிலையில் இவருடைய youtube சேனலை இளைஞர்களின் நலன் கருதி முடக்க பாலுசெட்டி காவல் நிலையம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதுகுறித்த சம்மன் டிடிஎஃப் வாசனுக்கு பாலுசெட்டி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகிய போது அளிக்கப்பட்ட நிலையில் இன்று நீதிமன்றத்தில் நீதிபதி இனியா கருணாகரன் முன்பு ஆஜராகினர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி வரும் 29ஆம் தேதி இதற்கான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இதற்கிடையே விபத்தில் சிக்கிய தன் வாகனத்தை திரும்ப பெற கோர்தல் சம்பந்தமாக டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் மனு செய்த நிலையில், அந்த மனுவும் 28ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் ஆஜராக வந்த டிடிஎஃப் வாசனை அருகில் இருந்த பள்ளி மாணவர்கள் சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்ட நிலையில், அவருக்கு தங்களுடைய உணவை கொடுப்பதாகவும் கூறினர்.
அதை மறுத்த வாசன், பள்ளி மாணவர்களிடம் “நன்றாக படித்து உயர் பட்டங்கள் பெற வேண்டும். படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என அறிவுரை வழங்கினார். தொடர்ந்து பலர் குவிந்ததால் அங்கு சில நிமிடங்களுக்கு பரபரப்பு ஏற்பட்டது.