காவல்துறை அதிகாரியின் அன்றைய யோசனை... இன்றும் பெற்றோர்களுக்கு வரப்பிரசாதம்..!

காவல்துறை அதிகாரியின் அன்றைய யோசனை... இன்றும் பெற்றோர்களுக்கு வரப்பிரசாதம்..!
காவல்துறை அதிகாரியின் அன்றைய யோசனை... இன்றும் பெற்றோர்களுக்கு வரப்பிரசாதம்..!
Published on

சென்னையில் பண்டிகை நாட்களில் குழந்தைகள் மாயமாவது தொடர்கதையான நிலையில் அதனை தடுக்க ஒரு போலீஸ் அதிகாரி எடுத்த முயற்சிதான் இன்றுவரை பல குடும்பங்கள் சந்தோஷமாக இருக்க உதவி புரிகிறது.

பொங்கல் பண்டிகையின் கடைசி நாள்தான் காணும் பொங்கல். தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம் என்றாலும் சென்னையில் கொஞ்சம் ஸ்பெஷல் தான். சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். மெரினா மட்டுமில்லாமல், பெசன்ட் நகர் கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா என அனைத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதும். இப்படி லட்சக்கணக்கான மக்கள் கூடும்போது சில நேரங்களில் பெற்றோர்கள் குழந்தைகளை எதிர்பாராதவிதமாக தொலைக்கும் சம்பவங்களும் அரங்கேறுவது உண்டு. அப்படி தவறிப்போகும் குழந்தைகளை தேடிப்பிடித்து கண்டுபிடிப்பது என்பது மிக மிக சிரமமான ஒன்று. பண்டிகை நாட்களில் குழந்தைகள் தொலைந்துபோவது சில வருடங்களாகவே தொடர்கதையாகி வந்தது. சந்தோஷமாக பண்டிகைகளை கொண்டாட வரும் மக்கள் குழந்தைகளை தொலைத்து சில நேரங்களில் சொல்வண்ணா துயரங்களில் மூழ்கிப் போன சம்பவங்களும் உண்டு.

அப்படித்தான் கடந்த 2013-ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி உதவி கமிஷனராக பீர் முகமது என்பவர் பதவி வகித்தார். அவ்வாண்டு காணும் பொங்கல் அன்று நூற்றுக்கணக்கான குழந்தைகள் காணாமல் போனது குறித்து புகார் வந்தது. இதனை தடுக்க என்ன செய்யலாம் என அவர் யோசித்தபோது தான் அவருக்கு ஒரு யோசனை தென்பட்டது.

அதாவது குழந்தைகளின் கையில் பட்டை ஒன்றை கட்டி, அதில் பெற்றோர்களின் தொலைபேசி எண் உள்பட விவரங்களை எழுதி அனுப்பினால் என்ன..? என யோசித்தார். இதனால் குழந்தை யாரிடம் கிடைக்கிறதோ அதன்மூலம் பெற்றோர்களுக்கு எளிதாக குழந்தைகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படும் என நம்பினார். குழந்தைகளை கண்டுபிடிப்பதும் எளிதாகும் என எண்ணினார். பீர் முகமதுவின் இந்த யோசனையே தற்போது வரை பல பெற்றோர்களுக்கு கை கொடுத்து வருகிறது.

இன்றும் கூட காணும் பொங்கல் கொண்டாடப்படும் நிலையில், பல இடங்களில் குழந்கைளின் கைகளில் பட்டை கட்டப்பட்டு அதில் பெற்றோர்களின் விவரங்கள் எழுதப்பட்டிருந்தது. சில குழந்தைகள் இன்றும் காணாமல்போன நிலையில் பீர் முகமது அன்று யோசித்த ஒரு முயற்சி இன்றுவரை பல பெற்றோர்களுக்கு கை கொடுத்துள்ளது. இதனிடையே என்னதான் இருந்தாலும் பெற்றோர்கள் வெளியே செல்லும்போது தங்களது குழந்தைகளை பத்திரமாக வைத்துக்கொள்ள காவல்துறை தரப்பில் தொடர்ச்சியாக அறிவுறுத்தப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com