சென்னை மாநகர பேருந்து ஓட்டிக் கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்த ஓட்டுநரை சமயோசிதமாக ரோந்து வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று காப்பாற்றிய உதவி ஆய்வாளருக்கும், காவலருக்கும் பாராட்டுகள் குவிகின்றன.
சென்னை கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் நேற்று 101 தடம் எண் கொண்ட சென்னை மாநகரப் பேருந்து, பூந்தமல்லியில் இருந்து பாரிமுனை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது மாநகரப் பேருந்து ஓட்டுநர் திடீரென மயக்கம் அடைந்ததால் நிலைதடுமாறி வாகனத்தை நியூ ஆவடி சாலை பச்சையப்பன் சிக்னல் சந்திப்பில் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு முழுமையாக மயங்கி விழுந்துள்ளார். பேருந்தில் பயணித்த பயணிகளில் ஒருவருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏதும் ஏற்படவில்லை. அப்போது அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கீழ்பாக்கம் உதவி ஆய்வாளர் யாகியா, பேருந்து நிலைதடுமாறி நின்றதைக் கண்டுள்ளார். உடனடியாக பேருந்தில் மயங்கிக் கிடந்த ஓட்டுநரை தனது ரோந்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.
மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் சமயோசிதமாக சைரன் ஒலியை எழுப்பிக்கொண்டே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு ரோந்து வாகன ஓட்டுநர் கார்த்திகேயனிடம் தெரிவித்துள்ளார். முதலில் மயங்கி விழுந்த பேருந்து ஓட்டுநரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் வாகனத்தை வேகமாக ஓட்டிச்சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சையளித்து பேருந்து ஓட்டுநரை காப்பாற்றியுள்ளனர்.
அதன்பின் விசாரித்ததில் அவர் பூந்தமல்லி பணிமனையைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் தங்கராஜ் என்பதும், அவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு இரதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதும் தெரியவந்தது. மயங்கிவிழுந்த பேருந்து ஓட்டுநர் தங்கராஜை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்ததால் உயிரைக் காப்பாற்ற முடிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவசரநேரத்தில் சமயோசிதமாக யோசித்து உயிரைக் காப்பாற்றிய உதவி ஆய்வாளர் யாகியா மற்றும் காவலர் கார்த்திகேயனுக்கு காவல்துறை அதிகாரிகள் பாராட்டுகலைத் தெரிவித்துள்ளனர். மேலும் மற்ற காவலர்கள் மத்தியிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.