சென்னை அரும்பாக்கம் ரசாக்கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் தீபா பாஸ்கர். முன்னனி நட்சத்திரங்கள் பலரோடு இணைந்து துணை நடிகையாக திரைப்படங்களில் நடித்து வரும் இவர், நேற்று தனது பிறந்தநாள் என்பதால் குடும்பத்தாரோடு வெளியே சென்று விட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வீட்டினுள் சென்று பார்த்துள்ளார்.
அப்போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர், அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வீட்டில் வைத்திருந்த பொருட்கள், 20 ஆயிரம் பணம் ஆகியவை மட்டும் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அதேநேரம், அவர் தான் சேமித்திருந்த பணத்தை பீரோவில் வைக்காமல் வேறு இடத்தில் வைத்திருந்ததால் பணம் தப்பியுள்ளது. பிறந்தநாளை முன்னிட்டு நகைகளை அணிந்து சென்றதால் அதுவும் தப்பியுள்ளது. இதையடுத்து நடிகை தீபா கொடுத்த புகாரில் அரும்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.