புதுக்கோட்டை அருகே கிராவல் மண் எடுக்கும் லாரிகளுக்கு டீசல் நிரப்பிவிட்டு பணம் கொடுக்காத உரிமையாளர் ஒருவரிடம் பணம் கேட்டு சென்றுள்ளார் பெட்ரோல் பங்க் உரிமையாளர். ஆனால் அந்த இடத்தில் கிராவல் மண் எடுக்கும் அந்நபர், அவரது காரின் டிக்கியில் வைத்திருந்த வாளை வைத்து வெட்ட முயன்ற காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வழக்குப் பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட இராக்கத்தான்பட்டியில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாலா (எ) நீலமேகம் எனும் நபர், கிராவல் மண்னை லாரிகள் மூலம் எடுத்து வருவதாக கூறப்படுகின்றது. கிராவல் மண் எடுக்கும் லாரிகளுக்கு இராக்கதான்பட்டி அருகே உள்ள நடராஜன் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் தொடர்ந்து டீசல் நிரப்புவதை வாடிக்கையாகக் கொண்டிருந்திருக்கிறார் பாலா (எ) நீலமேகம். பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு டீசலுக்கு 1,57,000 ரூபாய் கடன் பாக்கி சேர்ந்திருக்கிறது.
நீண்ட நாட்களாகவே அந்தப் பணத்தை தராததால் பெட்ரோல் பங்க் உரிமையாளர் நடராஜன், நேற்று நீலமேகத்திடம் நேரில் சென்று டீசலுக்கான கடன் தொகையை கேட்டுள்ளார். அப்போது நீலமேகம், தனது காரின் டிக்கியில் வைத்திருந்த வாளை வைத்து நடராஜனை வெட்ட முயற்சித்துள்ளார். இதனைக்கண்ட அங்கே இருந்தவர்கள் அவரை தேக்கி சமாதானப்படுத்திய நிலையில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நீலமேகம் வாளைவைத்து நடராஜனை வெட்ட முயன்ற காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் கிராவல் மண் எடுக்கும் நீலமேகம், அனுமதியின்றி கிராவல் மண் எடுப்பதாகவும் மேலும் இதே போன்று அவரிடம் பணி செய்யும் நபர்கள் ஊதியம் கேட்டு சென்றால் தொடர்ந்து அவர் வைத்திருக்கும் வாளைவைத்து இது போன்று பல முறை அவர் மக்களை மிரட்டியதாகவும் கூறப்படுகின்றது. மேலும் நீலமேகம் அடியாட்களை வைத்துக்கொண்டு தொடர்ந்து இதுபோன்று செயலில் ஈடுபடுவதாகவும், தற்போது அவரின் செயல் இந்த வீடியோ காட்சி மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் கூறும் அப்பகுதியினர், இதுதொடர்பாக அவர் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவற்றைத் தொடர்ந்து தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவரும் இந்த வீடியோ காட்சியை வைத்து புதுக்கோட்டை மாவட்டம் உடையாளிப்பட்டி காவல்துறையினர் விசாரணை செய்து வழக்குப் பதிவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.