கோவையில் யாசகம் கேட்பதுபோல் நடித்து நூதன முறையில் தொழிலதிபரிடம் எட்டாயிரம் ரூபாய் பணம் பறித்த திருநங்கையை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை பீளமேடு அடுத்து ஜி.ஆர்.ஜி நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தொழிலதிபர் மரியா பிரதீப்(46). இவரது மகன் கொடிசியா அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 16-ஆம் தேதி பிரதீப் தனது மனைவியுடன் மகனை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக சென்றுள்ளார். இருவரும் பள்ளியின் முன் காரில் காத்திருந்தபோது, அந்த வழியாக வந்த திருநங்கை ஒருவர் மரியா பிரதீப்பிடம் யாசகம் கேட்டுள்ளார். தனது கார் கண்ணாடியை திறந்த மரியா பிரதீப் தனது பர்ஸிலிருந்து பத்து ரூபாய் எடுத்து யாசகம் கொடுத்த நிலையில், அதனை பெற்றுகொண்ட திருநங்கை அங்கிருந்து நகர்ந்து தயாராக இருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி புறப்பட்டார்.
சிறிது நேரம் கழித்து தனது பர்ஸை பார்க்கும்போதே, அதிலிருந்த எட்டாயிரம் ரூபாய் காணாமல்போனதை கவனித்திருக்கிறார். இது தொடர்பாக மரியா பிரதீப் பீளமேடு போலீசில் புகார் அளித்தன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திருநங்கையை பிடித்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மரியா பிரதீப்பின் தங்கை இது தொடர்பாக வீடியோ ஒன்றை சமூகவளைதளங்களில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், யாசகம் அளிக்க கார் கண்ணாடியை திறந்தபோது, அந்த திருநங்கை பர்ஸிலிருந்து காசை எடுத்ததாகவும், தனது அண்ணனும், அண்ணியும் ஏதோ மயங்கிய நிலையில் இருந்ததால் கண்முன்னே அனைத்தும் நடந்தும் அதை தடுக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அங்கு திருநங்கை போல் வந்தவர் உண்மையிலேயே திருநங்கை தானா? அல்லது வேறு யாரேனும் வேஷமிட்டு வந்தார்களா என்றும் சந்தேகம் எழுந்ததால்தான் போலீசில் புகார் அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.