கந்துவட்டி கொடுமை செய்யும் கும்பல் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல், எங்களையே மிரட்டுகின்றனர் என்று கூறி ஓமலூர் நீதிமன்றம் முன்பாக ஒரு குடும்பத்தினர் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஓமலூர் போலீசார் வந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெண்களை அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகேயுள்ள கொங்குபட்டி ஊராட்சியில் மூங்கிலேரிபட்டி காலனி உள்ளது. இந்த பகுதியில் பால்ராஜ் மரகதம் தம்பயினர் தங்களது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், மரகதம், அவரது தாய், பள்ளி செல்லும் அவரது குழந்தைகள் ஆகியோர், ஓமலூர் நீதிமன்றத்திற்கு வந்தனர். தொடர்ந்து நீதிமன்றம் முன்பாக அமர்ந்து, “கந்துவட்டி கும்பல் அத்துமீறி, எங்களது வீட்டை உடைத்து சேதப்படுத்துகின்றனர். அவர்கள் மீது தீவட்டிப்பட்டி போலீசார் நடவடிக்கை எடுக்காமல், எங்களையே மிரட்டுகின்றனர்” எனக் கூறி, மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர்.
இதையறிந்து நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் போலீசார், அவர்களை தடுத்து, அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி சமாதானப்படுத்தினர். மேலும், போலீசார், கந்துவட்டி கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் கூறினர். தொடர்ந்து குழந்தைகள் மற்றும் மரகதத்தை ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், ”கணவர் பால்ராஜ், மூங்கிலேரிபட்டி பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவரிடம் குடும்ப தேவை மற்றும் மருத்துவ செலவிற்காக சிறுக சிறுக ஒன்பது லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். பணம் பெற்ற நாள்முதல் இதுவரை 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கட்டியுள்ளோம். இந்த நிலையில், கொடுத்த பணத்திற்கு குடியிருக்கும் வீட்டை எழுதி கொடுக்குமாறு கூறி, ராமன் மிரட்டுகிறார். இதுகுறித்து தீவட்டிப்பட்டி காவல் நிலையம், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் மனு அளித்துள்ளோம்.
ராமன் அடிக்கடி எங்களை மிரட்டுவதால், நாங்கள் தற்போது எனது அம்மா வீட்டில் குடியிருந்து வருகிறோம். எங்கள் குழந்தைகள் மட்டும் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். இந்த நிலையில், நேற்று எனது வீட்டின் பூட்டை உடைத்து அத்துமீறி உள்ளே சென்று பொருட்களை சேதப்படுத்தி, வேறு பூட்டை வைத்து ராமன் எங்களது வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். ஆனால், தீவட்டிப்பட்டி போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல், எங்களையே மிரட்டுகின்றனர்” என்று கூறினர். அதனால்தான் நீதிமன்றம் முன்பாக குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதாக அவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து கந்துவட்டி கொடுமை குறித்து ஓமலூர் டி.எஸ்.பி சங்கீதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் ஓமலூர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.