பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற கலவரத்தில் 18 லட்ச ரூபாய் காணாமல் போனதாக சுங்கச்சாவடி நிர்வாகம் செங்கல்பட்டு காவல் துறையில் புகார் அளித்திருந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பூபதிராஜா மற்றும் மாரிமுத்து என்ற இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கலவரத்தின்போது ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் சுங்கச் சாவடியில் இருந்து திருடி சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். அந்த தொகையை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே கலவரத்தின்போது சுங்கச்சாவடியில் வரி வசூலித்து கொண்டிருந்த ஊழியர்கள் பரமசிவன் மற்றும் செந்தில் ஆகியோர் அதுவரை வசூல் செய்த தொகையை எடுத்துக்கொண்டு ஓடியதாக கூறப்படுகிறது. அந்த தொகையை தற்போது டோல்கேட் மேலாளரிடம் அவர்கள் ஒப்படைத்துள்ளனர். பணத்தை பாதுகாக்கும் எண்ணத்தில் எடுத்துக்கொண்டு தப்பி ஓடியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் மிகவும் காலதாமதமாக பணத்தை ஒப்படைத்த காரணத்தினால் சந்தேகமடைந்த சுங்கச்சாவடி நிறுவனத்தினர் செங்கல்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதை அடுத்து சுங்கச்சாவடி ஊழியர்களான பரமசிவன், செந்தில் உட்பட ஏழு வடமாநிலத்தவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.