தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு விதிகளை மீறி வெளியில் சுற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 10ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. எனினும் முழு ஊரடங்கு தொடர்பான அறிவுரைகளை பொதுமக்களில் ஒரு சிலர் மீறி நடப்பதால் கொடிய கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு காவல்துறை செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.
எனவே, இன்று முதல் அத்தியவசியப் பணிகள் தவிர்த்து தேவையின்றி வெளியில் வாகனங்களில் வரும் மற்றும் நடமாடும் நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசின் அறிவுரைகளை பின்பற்றி சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.