நடிகையை திருமணம் செய்து வைக்கவில்லை எனில் ஆசிட் வீசுவதாக நடிகையின் தாயை மிரட்டிய தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியைச் சேர்ந்தவர் சித்ரா. இவரது மகள் நடிகை ஸ்ருதி. தமிழில் புதுப்படம் ஒன்றில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகி உள்ளார். தாயார் சித்ரா மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், முகப்பேரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ராஜசேகரன் தூரத்து உறவினர். கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் நடிகை ஸ்ருதி படித்துக் கொண்டிருக்கும் போது, ரியல் எஸ்டேட் அதிபர் ராஜசேகரன் மகன் அமுதன் வெங்கடேசன் ஒருதலையாக காதலித்து வந்தார்.
திருமணம் செய்து வைக்கும்படி தந்தை ராஜசேகரனும், மகன் அமுதன் வெங்கடேசன் என்னை வற்புறுத்தினார்கள். நான் அதற்கு ஒத்துழைக்கவில்லை. சம்மதிக்கவில்லை. அமுதன் வெங்கடேசன் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததார். இது தொடர்பாக நான்கு முறை அண்ணாநகர், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.
திருமணம் செய்து வைக்கவில்லை எனில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக என்னையும் எனது மகளையும் மிரட்டினார். மேலும் அமுதன் வெங்கடேசன் தானே கத்தியால் கழுத்தை அறுத்து தகொலை செய்து கொள்ளப்போவதாக வீடியோ எடுத்து அனுப்பியும் மிரட்டினார். அதனை சமூகவலைதளங்களில் வெளியிட்டும் மிரட்டினார்.
போலீசில் புகார் அளித்தும் பலனில்லை. நடிகை ஸ்ருதி வெளிநாட்டிற்கு படிக்கச் சென்று, மீண்டும் சென்னை வரவுள்ள நிலையில், கடந்த 5-ம் தேதி என்னை மயிலாப்பூர் கலைவாரி தெருவில் சென்று கொண்டிருந்த போது தந்தை ராஜசேகரனும் மகன் அமுதன் வெங்கடேசனும் சேர்ந்து தடுத்து நிறுத்தினர். ஸ்ருதியை திருமணம் செய்து வைக்கவில்லை எனில் ஆசிட் வீசுவதாக தந்தையும் மகனும் மிரட்டியதாக" புகாரில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இன்று தந்தை ராஜசேகரன், மகன் அமுதன் வெங்கடேசனை கைது செய்தனர்.