காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் சாடிய பெண் வழக்கறிஞர் மீது 7 பிரிவுகளில் வழக்கு3 பதிவு செய்யப்பட்ட நிலையில், முதல் தகவல் அறிக்கையில் அவரது மகளின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
சென்னை சேத்துப்பட்டு சிக்னலில் முகக் கவசம் அணியாமல் காரில் சென்ற பிரீத்தி என்ற பெண்ணை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் 500 ரூபாய் அபராதம் விதித்தனர். இதையறிந்த அந்த பெண்ணின் தாயார் தனுஜா கத்துலா, மற்றொரு சொகுசு காரில் சம்பவ இடத்திற்கு வந்து, காவல்துறையினரை கடுமையாக பேசினார்.
தான் ஒரு வழக்கறிஞர் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த பெண்மணி, முகக் கவசம் அணிய முடியாது, அபராதம் கட்ட இயலாது எனக் கூறி காவல்துறையினரை ஒருமையில் பேசியுள்ளார்.
இந்த வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் பேசிய பெண் வழக்கறிஞர் மீது தொற்றை பரப்பக்கூடிய செயலில் ஈடுபடுதல், அரசின் உத்தரவை மீறுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், ஊரடங்கை மீறி வெளியே வந்ததாக அவரது மகளான பிரீத்தி ராஜனின் பெயரையும் முதல் தகவல் அறிக்கையில் காவல்துறையினர் சேர்த்துள்ளனர்.