மொரப்பூர் ரயில் நிலையத்தில், ரயிலில் இருந்து இறங்கும் போது, நிலைதடுமாறி விழுந்த காவலர் மீது ரயில் சக்கரம் ஏறியதில் உடல் இரண்டு துண்டாக சிதறியது.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே ஈட்டியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு(36). இவர் 2013-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆயுதப்படையில் காவலராக பணியில் சேர்ந்துள்ளார். தற்போது சென்னையில் உள்ள ஆர்.கே நகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இன்று சென்னையில் இருந்து கோவை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது மொரப்பூர் ரயில் நிலையம் வந்தவுடன், நடைமேடையில் அருகில் வண்டி மெதுவாக செல்லும்போது, ரயிலில் இருந்து கீழே இறங்கும்போது நிலை தடுமாறி விழுந்தார். அப்பொழுது தண்டவாளத்தில் விழுந்த காவலர் வேலு, மீது ரயில் சக்கரம் ஏறியதில் உடல் இரண்டாக துண்டாாக சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து சேலம் ரயில்வே காவல்துறையினர் விரைந்துவந்து சடலத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காவலரின் உடல், உடற்கூறு ஆய்விற்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் உயிரிழந்த காவலருக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ரயில் நிற்பதற்கு முன்பே இறங்கியபோது தண்டவளத்தில் விழுந்த காவலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.