ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் காவல்துறையின் நிர்வாக பணிகள் முற்றிலுமாக முடங்கியுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு சங்கத்தைச் சேர்ந்தவர்களும் ஆதரவளித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் உணவு இடைவேளையின் போது ஆதரவாக போராட்டத்தை நடத்தினார்கள்.
இதனைதொட்ந்து கடந்த 24 ம் தேதியில் இருந்து தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு முழுவதுமாக ஆதரவை தெரிவிக்கும் வகையில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வரிகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் காவல்துறை தொடர்பான அனைத்து நிர்வாகப் பணிகள் முடங்கியுள்ளன.காலவரையற்ற வேலைநிறுத்தத்தை துவங்கும் விதமாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மற்றும் தமிழக டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றிய காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் 95 சதவீதம் பேர் பணிக்கு வரவில்லை.
இதனால் காவலர்களுக்கு சம்பளம் வழங்குவது, பதவி உயர்வு தொடர்பான ஆவணங்களை கொடுப்பது, விசாரணைக்காக வெளியூர் செல்லும் காவலர்களுக்கு பயணப்படி வழங்குவது, உள்ளிட்ட காவல் துறை நிர்வாகப் பணிகள் முற்றிலுமாக முடங்கியுள்ளது.மேலும் ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக தலைமை செயலக அரசு ஊழியர்கள் வெள்ளிக்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.