தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நிற்காத விஜயேந்திரர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழ்-சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நிற்கவில்லை. ஆனால், தேசியகீதம் இசைக்கும் போதும் மட்டும் விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செய்தார். விஜயேந்திரரின் இந்தச் செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டனக் குரல்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நிற்காத விஜயேந்திரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை இராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சி அகில பாரத அனுமன் சேனாவின் மாநில பொதுச் செயலாளர் இராம பூபதி சார்பில் இந்தப் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் இடம்பெற்ற மேடையில் இப்படியொரு சம்பவம் நடைபெற்று இருப்பதாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.