காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் மீது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்டத் தலைவராக இருந்தவர் கராத்தே தியாகராஜன். இவரை காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து சமீபத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டது. கட்சிக்கு எதிரான தொடர் நடவடிக்கை மற்றும் ஒழுங்கீனம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என கராத்தே தியாகராஜன் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து, திமுகவுடன் காங்கிரஸ் வைத்திருக்கும் கூட்டணிக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் இருந்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், அடையாறு காவல் துணை ஆணையரிடம் மாநில காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் அருள் பெத்தையா புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், காங்கிரஸ் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் ஆன நிலையில் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்த கராத்தே தியாகராஜன் முயற்சி செய்வதாகவும் சஸ்பெண்ட் ஆனவர்கள் கட்சியின் பெயரை எந்த விதத்திலும் பயன்படுத்தக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முறைகேடான செயல்களில் ஈடுபடும் கராத்தே தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.