கொரோனா பரிசோதனை செய்ய வரும் மாநகராட்சி ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம் என காவல்துறையினருக்கு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.
தொற்று பரவாமல் தடுக்க காவல்துறை மற்றும் மாநகராட்சி துறை இணைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இது தொடர்பாக அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் சென்னை காவல் ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், காவலர் குடியிருப்பில் வசிக்கும் நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அருகில் வசிக்கும் ஓய்வு பெற்ற காவலருக்கும் பரிசோதனை செய்ய முயன்றபோது, மாநகராட்சி ஊழியரை தகாத வார்த்தையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
தொற்று பரவலை தடுப்பதற்காக மாநகராட்சி ஊழியர்கள் நேராக சென்று பரிசோதனை செய்வதாகவும், உயிரை காப்பதற்காகவே பரிசோதனை செய்வதாகவும், அதனை காவலர்கள் யாரும் அவமானமாகப் பார்க்க வேண்டாம் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.