இந்து மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தியதாக பாஜக தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ‘கறுப்பர் கூட்டம்’ யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல், அதன் வெளியிட்டடாளர் சுரேந்திர நடராஜன் மற்றும் அதன் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை வேண்டி பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில், ‘கடந்த சில தினங்களுக்கு முன்பு கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் யூடியூப் சேனலில் முருகக்கடவுள் மற்றும் கந்த சஷ்டி கவசம் பாடல் குறித்து முகம் சுழிக்க வைக்கும் வகையில் ஆபாசமாகவும், இந்து மதத்தையும் அசிங்கப்படுத்தியும் வீடியோ வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்துமத தெய்வங்களையும், வழிபாட்டு முறைகளையும், இதிகாசங்களையும், புராணங்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
எனவே இந்த வீடியோவை வெளியிட்ட சுரேந்திர நடராஜன் மற்றும் அதன் நிர்வாகத்தினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. அத்துடன் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலுக்கு தடைசெய்யப்பட்ட அமைப்பிடமிருந்து பணம் வருவதாக சந்தேகம் உள்ளதாகவும், அதனை தீவிரமாக விசாரித்து அந்த யூடியூப் சேனலை தடை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை காவல் ஆணையரிடம் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் எம்.என்.ராஜா, வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால்கனகராஜ், மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் ஆகியோர் அளித்தனர். இந்நிலையில் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 249/2020 U/S 153,153(A)(1)(a),295(p),505(1)(b),505(2) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாதி, மத, இன- மொழி ரீதியான மோதலை தூண்டுவதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.