நாங்குநேரியில் முறைகேடாக பணம் வைத்திருந்ததாக தேர்தல் அதிகாரி அளித்த புகாரின்பேரில், திமுக எம்.எல்.ஏ சரவணகுமார் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாங்குநேரி தொகுதியில் உள்ள மூலக்கரைப்பட்டி அருகே அம்பலம் கிராமத்தில் ஒரு வீட்டை திமுக-வினர் வாடகைக்கு எடுத்ததாகவும், மேலும், பணப்பட்டுவாடா செய்யும் வகையில், வாக்காளர் பட்டியலை தயார் செய்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது, பெரியகுளம் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்ளிட்ட திமுகவினரை அப்பகுதி மக்கள் பணத்துடன் சிறைபிடித்து, காவல்துறைக்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேர்தல் பறக்கும் படையினர், வீட்டின் முன் சிதறிக் கிடந்த 2.78 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். வீட்டிலிருந்த 7 பேரில் இருவர் தப்பியோடிவிட்டதாக கூறப்படும் நிலையில், 5 பேரிடம் விசாரணை நடைபெற்றது.
இதனிடையே நாங்குநேரி திமுக ஒன்றியச் செயலாளர் சுடலைக்கண்ணு மூலைகரைப்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தேர்தல் பணிக்காக வீடு எடுத்து தங்கியிருந்த எம்எல்ஏ சரவணகுமார் உள்ளிட்ட 7 பேரை, அந்த பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் தாக்கி, செலவுக்காக வைத்திருந்த பணத்தை பறித்து சென்றதாக குற்றம்சாட்டினார்.
இருதரப்பு புகார் குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், நாங்குநேரியில் முறைகேடாக பணம் வைத்திருந்ததாக திமுக எம்.எல்.ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரி ஜானார்த்தன் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அம்பலத்தில் திமுகவினரை தாக்கி, செல்போன், பணம் பறித்ததாக 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.