கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் வரும் சில இளைஞர்கள் பொதுமக்களிடம் அடிக்கடி செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து காவல் நிலையங்களில் பொதுமக்கள் தொடர்ச்சியாக புகார் தெரிவித்து வருவதையடுத்து, போலீஸாரும் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிரமாக ஆராய்ந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 7ம் தேதி சிடிசி காலனியை சேர்ந்த ரயில்வே ஊழியரான சிவதாசன் என்பவர் தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கும்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் அவருடைய செல்போனை பறித்து சென்றனர். இது குறித்து கிழக்கு காவல் நிலையத்தில் சிவதாசன் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணையை மேற்கொண்ட போலீஸார், செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்கள் பொள்ளாச்சி கோட்டூர் ரோடு பெரியார் காலனியை சேர்ந்த பிரவீன்குமார் (22) தாஹிர் உசேன் (20) மற்றும் எம்ஜிஆர் நகரை சேர்ந்த மோகன் (24) என்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து மூன்று பேரையும் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், நேரு நகரில் பதுங்கி இருந்த மூன்று பேரையும் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் மடக்கிப்பிடித்தனர். விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதனால் மூன்று பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.